சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டம் கொர்ரா கிராமத்தில் பழங்குடியினர் வசிக்கும் கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, அங்கிருக்கும் கிறிஸ்தவர்கள் “வெளிநாட்டு மதத்தை” பின்பற்றுவதாக குற்றம் சாட்டப்பட்டு, கிராமங்களை விட்டு வெளியறி காடுகளில் போய் வாழ சொல்லி வற்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமையன்று பக்ருபராவிலுள்ள கிறித்தவ தேவலாயத்திற்குள் நுழைந்த நூற்றுக்கணக்கானர் கொண்ட கும்பலொன்று முழக்கங்களை எழுப்பியபடி கிறிஸ்தவ தேவாலயத்திற்கு நுழைந்து, மேரி மாதாவின் சிலையை உடைத்து சேதப்படுத்தியது. அதோடு காவல்துறையினரை நோக்கி கற்களை வீசியும், கழிகளால் அடித்தும் தாக்குதல் நடத்தியது. இதில் காவல்துறை கண்காணிப்பாளர் சதானந்த் குமார் என்பவர் தலையில் காயமுற்றார். மேலும், சில போலீசாரும் காயம் அடைந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாராயண்பூர் காவல் கண்காணிப்பாளர் சதானந்த் குமார் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எங்களை சந்திக்க போராட்டக்காரர்களை அழைத்தோம். கலெக்டரும் நானும் அவர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் பேசினோம். போராட்டத்தை அமைதியாக நடத்துமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தோம். ஆனால், அவர்களில் சிலர் வன்முறையில் ஈடுபட்டு தேவாலயத்தைத் தாக்கச் சென்றனர்” என்று கூறினார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.