Thursday, February 19, 2026

இந்தியாவின் புதிய குடியரசு துணை தலைவர்!

by Editorial Team
0 comments
India New Vice President

இந்தியாவின் 15வது துணை குடியரசு தலைவராக தமிழகத்தை சேர்ந்த சி.பி. இராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய துணை குடியரசுத் தலைவருக்கு நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வேட்பாளராகப் போட்டியிட்ட திரு சி.பி. இராதாகிருஷ்ணன் அதிக வாக்குகளைப் பெற்று துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 452 வாக்குகளைப் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்தியா கூட்டணியின் வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டியை 300 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களையும் உள்ளடக்கிய இந்தத் தேர்தலில், NDA-வுக்கு இருந்த அசைக்க முடியாத ஆதரவு காரணமாக, அவரது வெற்றி ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுதான் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றனர்.

திருப்பூரைச் சேர்ந்த சி.பி. இராதாகிருஷ்ணன், நீண்டகால அரசியல் மற்றும் நிர்வாக அனுபவத்தைக் கொண்டவர். கோயம்புத்தூரிலிருந்து இரண்டு முறை மக்களவை உறுப்பினராக (1998 மற்றும் 1999) தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் ஆளுநராக பணியாற்றியதுடன், தெலங்கானா மற்றும் புதுச்சேரியின் துணை ஆளுநராகவும் இருந்தார். இந்தியாவின் இரண்டாவது உயர்ந்த அரசியல் பதவியான துணை ஜனாதிபதி பதவிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலம், துணை குடியரசுத் தலைவர் பொறுப்பிற்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது நபர் என்ற பெருமையைப் பெறுகிறார். இதற்கு முன், டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் மற்றும் ஆர். வெங்கடராமன் ஆகியோர் இந்தப் பதவியை அலங்கரித்துள்ளனர்.

68 வயதான திரு. சந்திரபுரம் பொன்னுசாமி இராதாகிருஷ்ணன், திருப்பூரில் 1957 மே 4ஆம் தேதி பிறந்தவர். கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். இளம் வயதிலேயே ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் (RSS) தன்னார்வலராக இணைந்து, 1974ஆம் ஆண்டில் பாரதிய ஜன சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராக உயர்ந்தார்.

2004 முதல் 2007 வரை, தமிழ்நாட்டின் பாஜக மாநிலத் தலைவராகப் பணியாற்றிய அவர், கட்சியின் வளர்ச்சிக்காக 19,000 கி.மீ. தூரம் ரதயாத்திரை சென்றார்.

இன்று, ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், குடியரசுத் தலைவர் மாண்புமிகு திரௌபதி முர்மு அவர்கள் முன்னிலையில் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் துணை ஜனாதிபதியாகப் பதவியேற்றார். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டனர். விழா முடிந்ததும், அவர் மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

துணை ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு, சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்கள் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையான ராஜ்ய சபாவின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

நாடாளுமன்றத்தின் மேல் சபையை வழிநடத்தும் இந்த பொறுப்பு, அவரது நீண்ட அரசியல் பயணத்திற்கும், நாட்டிற்காக அவர் ஆற்றிய சேவைகளுக்கும் அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது.

தேசியவாதக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட அவர், இனி இந்தியாவின் சட்டமன்ற நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்க உள்ளார். இது, அவரது தலைமைத்துவத்தின் புதிய கோணத்தைக் காட்டும் என்று அரசியல் வட்டாரங்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றன.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech