தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகள் பிரான்ஸ் நாட்டில் ஆழமாய் வேரூன்றியிருக்கின்றன என்பதை சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் வெளிப்படுத்தியிருக்கிறது.
தமிழுக்கும் பிரஞ்சுக்கும் இடையேயான பந்தத்திற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. 1664ல் மேற்கு இந்தியக் கம்பெனியை பிரான்ஸ் நிறுவதிலிருந்தே இந்த தொடர்பு இழையோடுகிறது.
தனது காலனி ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பிய ஐரோப்பியர்களுக்கும் பிரஞ்சும், தரங்கப்பாடியும் அதிகார மையங்களாக இருந்ததை வரலாறு பதிவு செய்திருக்கிறது.
பிரான்ஸ் நாட்டுடன் ஏற்பட்ட இத்தகைய தொடர்பு தமிழர்களை பிரான்ஸ் ஆதிக்கம் செலுத்திய இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றது எனலாம். பாண்டிச்சேரியிலிருந்து ஏராளமான தமிழர்கள் சுதந்திர காலத்தில் பிரான்ஸ் நாட்டிற்கு புலம்பெயர்ந்ததும் நிகழ்ந்தது.
இப்படி தங்கள் வாழ்க்கையை பிரான்ஸ் நாட்டிற்கு மாற்றிக் கொண்ட தமிழர்கள் தங்களுடைய கலாச்சாரத்தின் அடையாளங்களை இன்னும் தங்களுக்குள் தக்க வைத்திருக்கின்றனர் என்பது வியக்க வைக்கிறது.
ஈழத்தமிழர்களும் பிரான்ஸ் நாட்டிற்குக் குடிபெயர ஆரம்பித்த பின் இத்தகைய தமிழ் உணர்வு பிரான்ஸ் நாட்டில் இன்னும் வலுவடைந்தது. அதன் ஒரு உதாரணமாக கடந்த சனவரி மாதம் பிரான்சிலுள்ள ஆறு தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து “தமிழர் திருநாள் 2008” எனும் நிகழ்ச்சியை நடத்தினர்.
தமிழகத்தில் தமிழன் மறந்து போய் தொலைக்காட்சியின் சீரழிவு நிகழ்ச்சிகளுக்குள் ஆமையாய் அடங்கிக் கிடக்க பிரான்ஸ் நாட்டில் தமிழர்கள் எழுச்சி பெற்றிருக்கின்றனர்.
விழா மேடையில் பொய்க்கால் குதிரை, திராவிடக் கலாச்சார களரி, கூத்து, நாடகம், கவிதை என தமிழின் அடையாளங்கள் கம்பீரத்துடன் முகம் காட்டின. பாரதியின் “வாழ்க நிரந்தரம்” பாடலை ஈழ இசைவடிவில் பாடி தமிழக ஈழ உணர்வு இன்னும் தங்கள் குருதிகளில் கலந்திருக்கிறது என நிரூபித்தனர்.
பிரான்ஸ் நாட்டில் மொத்தம் ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் தமிழர்கள் உள்ளனர். இவர்களில் ஐம்பதாயிரம் பேர் நமது ஈழத் தோழர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
பாரீசில் தமிழர்கள் தங்கள் புத்தகக் கடைகள் நான்கைத் திறந்து தமிழின் பரவலுக்கு வழிகோலியிருக்கின்றனர்.
இத்தகைய சூழலில் சமீபத்தில் நடந்த பாரீஸ் நகரும் அதைச் சார்ந்த பகுதிகளிலும் நடந்த பிரான்ஸ் உள்ளாட்சித் தேர்தலில் பன்னிரண்டு தமிழர்கள் வெற்றி பெற்று தங்களுடைய இருப்பை அரசியல் அரங்கிலும் உறுதி செய்திருக்கின்றனர் என்பது ஆனந்தமாய் ஒலிக்கிறது.
நகுலேஸ்வரி அரியரத்னம், சர்மிளா சபாரத்தினம், சோபியா சூசைபிள்ளை, பிரீத்தி நவனீதராஜு, சம்ததயாளினி, அருளாசந்தம் புவனேஸ்வரராஜா, கலையரசி ரவீந்திரநாதன், சந்திரசேகரன், சம்பா நிலவண்ணன், மரிய டார்வெஸ், லீலா ராஜேந்திரம் எனும் இவர்களில் முதல் ஏழுபேர் ஈழத்தைச் சேர்ந்தவர்கள்.
இதில் சுவையான இன்னொரு செய்தி என்னவெனில் அனைத்து ஈழ பிரதிநிதிகளுமே இடது சாரியைச் சேர்ந்தவர்கள் என்பது தான்.
இது தவிர வடக்கு ஐரோப்ப நாடான நார்வேயில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் எட்டு ஈழத் தமிழர்கள் வெற்றி பெற்றனர். இவர்களில் ஐந்து பேர் பெண்கள் என்பதும், அவர்களில் ஒருவருக்கு 19 வயதே என்பதும், எழுபது விழுக்காடு பெண்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர் என்பதும் ஆனந்தமளிக்கும் செய்தியாகும்.
தங்கள் சொந்த ஊரில் மேனாட்டுக் கலாச்சாரத்தின் கரையான்களால் அரிக்கப்பட்டு அடையாளங்களை இழந்து கொண்டிருக்கும் தமிழர்களின் இனம் வெளிநாடுகளில் தங்கள் இருப்பை தொன்மையான கலாச்சாரங்களின் துணையோடு வெளிப்படுத்தி வருகிறது.
இது உலகத் தமிழர்களுக்கு ஆனந்தமாக இருக்கும் அதே வேளையில், தமிழகத் தமிழர்களின் போலிக் கலாச்சார மோகத்தின் மீதோர் சாட்டையாகவும் இறங்குகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
தகவல் : YARL.COM