கடந்த 18 ஆண்டுகளாக பாரீஸ் விமான நிலையத்திலேயே வாழ்ந்து வந்த ஈரானிய அகதி மெஹ்ரான் கரீமி நஸ்ஸேரி, மரணமடைந்தார்.
1988ஆம் ஆண்டு குடியுரிமை சிக்கல் காரணமாக, பாரீஸ் நகருக்குள் அனுமதி மறுக்கப்பட்டதால், ரோய்ஸி சார்லஸ் டே கல்லே விமான நிலையத்தின் ஒரு ஓரத்தில் தனது உடமைகளுடன் தங்கியிருந்த கரீமி, வாழ்நாள் முழுவதையும் அங்கேயே கழித்துவிட்டார்.
2004ஆம் ஆண்டு, இவரைப் பற்றிய செய்திகளைப் படித்த தி டெர்மினல் என்ற வெற்றி பெற்ற ஹாலிவுட் படம் உருவானது. இப்படத்தில் டோம் ஹாங்க்ஸ் நடித்திருந்தார். இது கரீமியுன் வாழ்க்கையை வெளிஉலகுக்குக் கொண்டு வந்தது.
இவரைப் பற்றி தகவல்கள் கிடைத்து, பாரீஸ் நகருக்குள் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சில வாரங்கள் பாரீஸ் நகரில் இருந்த அவர், மீண்டும் தான் தங்கியிருந்த அதே விமான நிலையத்தின் ஒரு சிறுப் பகுதிக்கே வந்தடைந்தார். அது முதல் அவர் அங்கேயே இருந்து இயற்கையான முறையில் மரணத்தைத் தழுவியிருக்கிறார்.
1945ஆம் ஆண்டு ஈரானில் பிறந்தவர் கரீமி. தனது தாயைத் தேடி ஐரோப்பாவுக்கு பயணமானார். பெல்ஜியத்தில் சில காலம் தங்கியிருந்தார். குடியுரிமை பிரச்னை காரணமாக பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். இறுதியாக பிரான்ஸ் வந்தவர், விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திலிருந்து வெளியேற அனுமதி மறுக்கப்பட்டதால், அதையே தனது வீடாக்கிக் கொண்டார்.
தனது வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை எழுதுவதும், புத்தகங்கள் படிப்பதும், செய்தித்தாள் வாசிப்பதுமாக நாள்களைக் கழித்து வந்தார். இவரைப் பற்றிய செய்திகள் ஊடகங்கள் வெளியான போது, இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், இவரது சொந்தக் கதையை தி டெர்மினல் என்ற பெயரில் படமாக்கினார்.
இதையடுத்து, கரீமி உலகப் புகழ்பெற்றார். ஊடகங்கள் அவரை மொய்த்தன. ஒரு நாளைக்கு ஆறு பேட்டிகள் கொடுக்கும் அளவுக்கு பிஸியானார். இந்தப் படத்தினால் கிடைத்த பணத்தை வைத்துக் கொண்டு அவர் தனது மிச்ச காலத்தை நடத்தினார் என்றும், சாகும்வரை அவர் இந்த விமான நிலையத்தையே வீடாக்கிக் கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தகவல் : TUTYONLINE.NET