தன் வளர்ப்பு நாய் கடித்தது குறித்து காவல்துறையில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த நாயின் உரிமையாளர் புகாரளித்த பெண்ணின் வண்டிகளுக்கு தீ வைத்துள்ளார்.
பெங்களூரை சேர்ந்தவர் புஷ்பா. இவர் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் பாபு, காயத்ரி மற்றும் அவருடைய பெற்றோர் நாகராஜ், கௌரம்மா ஆகியோர். இவர்கள் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 13-ஆம் தேதி வழக்கம் போல் பணிக்கு சென்று கொண்டிருந்த புஷ்பாவை, பாபு மற்றும் காயத்ரியின் ரோட்வெய்லர் (Rottweiler) வகை வளர்ப்பு நாய் கடித்து குதறியுள்ளது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட புஷ்பாவை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்த பாபு மற்றும் காயத்ரி, காவல்துறையில் புகார் ஏதும் அளிக்க வேண்டாம் என்று அவரை கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், பாபு மற்றும் காயத்திரியின் பெற்றோர்களான நாகராஜ் மற்றும் அவருடைய மனைவி கௌரம்மா ஆகிய இருவரும் பாதிக்கப்பட்ட புஷ்பாவின் மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொள்வதாகவும், அவர் நலமடையும் வரை அவருக்கு தேவையான பணத்தை அளிப்பதாகவும் கூறியுள்ளனர்.
ஆனால், வாக்குறுதி அளித்தப்படி அவர்கள் உதவவில்லை என்று தெரிகிறது.
காயமடைந்து ஒரு மாதம் கழிந்த பின்னரும் நாகராஜ் குடும்பத்தினர் தனக்கு வேண்டிய எந்த உதவிகளையும் செய்யாததால், மனம் வேதனையடைந்த புஷ்பா, வளர்ப்பு நாய் தாக்கியதால் பாதிக்கப்பட்ட தன்னுடைய மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொள்ளாமல் நாயின் உரிமையாளர்களான நாகராஜ் குடும்பத்தினர் தன்னை ஏமாற்றி விட்டதாகக் கூறி காவல்துறையில் புகாரளித்திருந்தார்.
மேலும், புஷ்பா ஏற்கனவே நாகராஜ் மற்றும் பாபு ஆகியோர் இருக்கும் ஏலச்சீட்டு ஒன்றில் மாதா மாதம் பணம் செலுத்தி வந்துள்ளார்.
திடீரென்று ஏற்பட்ட தன்னுடைய மருத்துவ செலவுகளுக்காக ஏலச்சீட்டிலிருந்து புஷ்பா பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
இச்சூழலில், கடந்த திங்கட்கிழமை அன்று புஷ்பாவின் வீட்டிற்கு சென்ற பாபு, ஏலச்சீட்டிற்கான பணத்தை திருப்பித் தருமாறு புஷ்பாவை மிரட்டியதாகவும், மேலும் தகாத வார்த்தைகளால் அவரையும் அவர் மகனையும் திட்டி விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த நாள் அதிகாலை 3 மணி அளவில் திடீரென்று ஏற்பட்ட சைரன் சத்தம் கேட்டு எழுந்த புஷ்பா குடும்பத்தினர் அவர்களுடைய இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரிவதை கண்டுள்ளனர்.
தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றும் அந்த இரண்டு வாகனங்களும் தீக்கிரையானது.
இதனையடுத்து பெங்களூரின் கொத்தனூர் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகாரளிக்கப்பட்டுள்ளது.
புஷ்பா அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.