இரு வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 12 காவல்துறையினர் உட்பட 16 பேர் பலியாகியுள்ள சம்பவம் மெக்சிகோவில் நடைபெற்றுள்ளது.
மெக்சிகோவின் தென் மாநிலமான கெரைரோவில் அடையாளம் தெரியாத நபர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் காவல்துறையைச் சேர்ந்த 11 பேர் சம்பவ இடத்திலே கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலின் நோக்கம் தெரியவில்லை.
மாநிலத்தின் உயர் அதிகாரி ஒருவர் சென்று கொண்டிருந்த காரின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரும் அந்த உயர் அதிகாரியும் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாவது துப்பாக்கி சூடு சம்பவத்தில், மெக்சிகோவின் டக்கம்பரொ நகர மேயருடைய சகோதரரை ஆயுதம் ஏந்திய கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் ஐந்து பேர் பலியானதோடு இரண்டு பேர் காயமடைந்தனர்.
உணவக ஊழியர் ஒருவரும் காவலர் ஒருவரும் இதில் கொல்லப்பட்டுள்ளனர்.
நகரமேயரின் சகோதரர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியான காணொளியில், துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று துப்பாக்கியால் சுட்டப்படியே பல வாகனங்களில் சென்றது பதிவாகியுள்ளது.
போதை பொருட்களுக்கு எதிராக மெக்சிகோ அரசு கடும் நடவடிக்கை எடுக்க துவங்கிய 2006ம் ஆண்டு முதல்இதுவரை சுமார் 4,20,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அந்நாட்டில் ஒரு லட்சம் பேருக்கு 25 பேர் கொல்லப்படுகின்றனர் எனுமளவில் கொல்லப்படுபவர்களின் விகிதம் உள்ளது.
மேலும் கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர்.
கெரெரோ மற்றும் மிசோகன் ஆகிய இரண்டு நகரங்களும் வன்முறைக்கு பெயர் போன, நாட்டிலேயே மிக மோசமான நகரங்கள் ஆகும்.
காவல்துறையினருக்கும் போதை குழுக்களுக்கும் இடையே அடிக்கடி கடும் துப்பாக்கிச் சண்டைகள் நடைபெறும்.
இருப்பினும் கெரிரோ மெக்சிகோவிலேயே மிக ஏழ்மையான மாநிலமாக உள்ளது.