துருக்கி, சிரியாவில், நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,000-ஐ கடந்துள்ளது. துருக்கியை புரட்டிப்போட்ட பயங்கர நிலநடுக்கத்தை அடுத்து அங்கு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
துருக்கி மற்றும் சிரியா எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை 7.8 என்ற ரிக்டர் அளவில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அந்நாடுகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
அவர்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான சடலங்கள் மீட்கப்படுகின்றன. நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், காராமன்மரா உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகளை பார்வையிட்ட துருக்கி அதிபர் தயீப் எர்டோகனுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மீட்பு பணிகள் மெதுவாக நடைபெறுவதை ஏற்றுகொண்டுள்ளார் அதிபர் எர்டோகன். இதுபோன்ற இயற்கை பேரிடர் காலத்தில் ஒற்றுமை தேவை என்றும், மக்களிடையே எதிர்மறை பிரசாரம் செய்ய வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதே நேரத்தில் போதுமான புல்டோசர்கள் மற்றும் கிரேன்கள் இல்லாததால் சிரியாவில் மீட்பு பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளின் பொருளாதார தடையும் இருப்பதால் போதிய எரிபொருள் வசதியும் இல்லாத நிலை உள்ளது என அந்நாட்டு அரசின் ஆலோசகர் பூதைனா ஷப்பான் தெரிவித்துள்ளார்.
இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்த நிலையில், அதன்பின்னர் 2000-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் பலியானோர் எண்ணிக்கை 22,765 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இன்று 6 நபர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கடும் குளிர் மற்றும் சேதமடைந்த சாலைகள் போன்ற காரணங்களால் மீட்புப் பணி கடும் சவாலாக உள்ளது.