காவல்துறையின் குற்றத்தடுப்பு பிரிவினர் Allende நகரத்தில் ஒரு வீட்டிலிருந்து 135,000 யூரோக்கள் பணத்தையும், 450 துப்பாக்கி தோட்டாக்களையும், போதைப்பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக முகவராக செயல்பட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக யூரோ பணம், ஆயுதங்கள், போதைப்பொருட்களை கைப்பற்றி பறிமுதல் செய்துள்ளனர்.
காவல்துறை கண்காணிப்பு பணியின்போது குற்றத்தடுப்பு படையினர் என்றழைக்கப்படும் BAC காவலர்கள், ஓரிடத்தில் போதைப்பொருள் கைமாறுவதை கண்டுள்ளனர். குறிப்பிட்ட நபர் அவர் வீட்டிற்கும் வீதிக்கும் வருவதும் போவதுமாக இருந்துள்ளார். உடனடியாக அந்நபரை கைது செய்த காவல்துறையினர் அவர் வீட்டை சோதனையிட முடிவு செய்தனர்.
மோப்ப நாய் உதவியுடன் போதைப்பொருட்களை கண்டுபிடிக்க அவரது அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை மேற்கொண்ட காவல்துறையினர், அவருடைய வீட்டில் 40 கிராம் கொகைன் எனப்படும் போதைப்பொருளையும், 250 கிராம் கஞ்சாவையும், 400 – 9 மிமீ தோட்டாக்களையும், 67 – 357 மேக்னம் தோட்டாக்களையும், 135,950 யூரோக்கள் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர். இவை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் Clos-Saint-Lazare மாவட்டத்தில் குற்றத்தடுப்பு பிரிவினர் 700 கிலோ கஞ்சாவை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.