அனைத்து பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 62இலிருந்து 64ஆக உயர்த்த வகை செய்யும் ஓய்வூதிய சீர்திருத்த திட்டங்களுக்கு எதிராக பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் ஒரு நாள் பொது வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை இன்று நடத்தின. நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளது பரபரப்பாகியுள்ளது.
பொதுப்போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு, பல பள்ளிகள் மூடப்பட்டன.
பிரான்சில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களில் சுமார் 65% பேர் வியாழக்கிழமை திட்டமிடப்பட்ட ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக நாடு தழுவிய வேலைநிறுத்த நடவடிக்கையில் கலந்து கொண்டனர் என்று SNES FSU தொழிற்சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று தெரிவித்தார். இருப்பினும் கல்வி அமைச்சகம் ‘35%’ என்று கூறியது.
பிரான்ஸ் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெற்றன. பிரான்சின் தலைநகரமான பாரிசில் மிகப்பெரியளவில் போராட்டம் நடைபெற்றது. பெரும் தொழிற்சங்கங்கள் பிற்பகலில் Place de la République-லிருந்து நகரம் முழுவதும் அணிவகுத்துச் சென்றன. இதில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.
இரயில் ஓட்டுநர்கள், பள்ளி ஆசிரியர்கள், செவிலியர்கள், காவல்துறை சங்கங்கள் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்கள் என பல்வேறு துறையினரும் வேலை நிறுத்தங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
Nantes, Lyon, Bordeaux, Marseille, Toulouse உள்ளிட்ட நகரங்களில் பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் காலையிலேயே அணிவகுத்தனர்.
ஒரு சில இரயில் தடங்களில், பத்து இரயில் சேவைகளில் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே இயங்கின. பாரிசில் மெட்ரோ சேவை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.
CGT தொழிற்சங்கத்தின் தலைவரான பிலிப் மார்டினெஸ் ‘ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீதிகளில் இறங்குவார்கள்’ என்று கணித்தது குறிப்பிடத்தக்கது. தீவிர இடது சாரிகலின் வன்முறையை தடுப்பதற்காக ஏராளமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஏற்கனவே நடைபெற்ற கருத்துக்கணிப்புக்கள் பிரெஞ்சு மக்களில் பெரும்பாலானோர் ஓய்வூதிய வயதை 62 இல் இருந்து 64 ஆக உயர்த்தும் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தத்தை எதிர்க்கின்றனர் என்பதைக் காட்டுகின்றன. அரசின் திட்டத்தை பணியாளர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பிரதமர் Élisabeth Borne இந்த மாத தொடக்கத்தில் கோடிட்டுக் காட்டிய முன்மொழிவுகளின்படி, 2027-ஆம் ஆண்டு முதல் மக்கள் முழு ஓய்வூதியத்திற்கு தகுதி பெற 43 ஆண்டுகள் உழைக்க வேண்டும். இது இப்போது 42 ஆண்டுகளாகும். அதாவது, குறைந்தது 43 வயதுவரை வேலை செய்தால்தான் முழு ஓய்வூதியம் வழங்கப்படும் என அரசு முன்வைத்துள்ள திட்டம் கூறுகிறது.
கிட்டத்தட்ட மற்ற அனைத்து ஐரோப்பிய நாடுகளும் அலுவல்பூர்வ ஓய்வு பெறும் வயதை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன. எடுத்துக்காட்டாக, இத்தாலி மற்றும் ஜெர்மனியில் 67 ஆகவும், ஸ்பெயினில் 65 ஆகவும் உள்ளன.இங்கிலாந்தில் ஓய்வு பெறும் வயது தற்போது 66 ஆக உள்ளது.