பிரான்சில் கர்ப்பிணி பெண்ணுக்கு பேருந்திலேயே குழந்தை பிறந்துள்ளது.
Meaux (Beauval) நகரில் வியாழக்கிழமை காலை பத்து மணியளவில் பேருந்தில் கணவன் மற்றும் குழந்தையுடன் ஏறிய பெண் ஒருவர் பேருந்து கிளம்பிய சில மணித்துளிகளில் பேருந்திலேயே குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். பேருந்தில் உடனிருந்த பெண்கள் சிலர் அவருக்கு உதவியுள்ளனர்.
இதுகுறித்து அப்பேருந்தின் ஓட்டுநர் கிறிஸ்தோப் தெரிவிக்கும்போது ‘நாங்கள் Beauval-ஐ விட்டு கிளம்பும்போது அப்பெண்மணியின் கணவர் என்னிடம் மனைவிக்கு வயிற்றுவலி அதிகரித்துள்ளதாக கூறினார். அவர் கர்ப்பிணியாக இருந்ததால், பேருந்திலிருந்த பயணிகளை கீழே இறக்க தெரிவித்துவிட்டு, உடனடியாக 112 எனும் அவசர சேவை எண்ணுக்கு உதவி கோரி அழைத்தேன். அவசர சேவைக்காக காத்திருக்க பொறுக்காமல் அருகிலுள்ள மருத்துவர், மருந்தகங்களை தேடிச் சென்றேன். அதற்குள் குழந்தை பிறந்துவிட்டது’ என்றார்.
குழந்தை பிறக்கும் போது அப்பெண்ணுக்கு உதவியாக ஐந்து பெண்கள் இருந்துள்ளனர். ஒருவர் அறுவை மருத்துவத்துக்கு பயன்படுத்தும் கையுறையை அணிந்திருந்தார். பின் மருந்தாளுனர்கள் பிறந்த குழந்தைக்கு வெப்பத்தை ஏற்படுத்த போர்வையில் சுற்றியுள்ளனர். அவசர சேவையினர் வந்ததும் குழந்தையின் தொப்புள் கொடியினை துண்டித்தனர். மேலும், தாயும் சேயும் நலமுடனும், பாதுகாப்பவும் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்துள்ளனர். தாயும் குழந்தையும் Meaux-விலுள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவசர சேவை பிரிவு தாயும் சேயும் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.