துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9500ஐ கடந்துவிட்டது. துருக்கியில் 7000 பேரும் சிரியாவில் 2000க்கும் அதிகமானோரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
கட்டிட இடிபாடுகள் இன்னும் மலைபோல் குவிந்துள்ளதால் அங்கு மீட்புப் பணிகளுக்கு பல்வேறு உலக நாடுகளும் உதவி வருகின்றன. இந்தியாவிலிருந்தும் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 2 குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்துள்ளன. இந்த குழுக்களில் 100 வீரர்களுடன் பயிற்சி பெற்ற மோப்ப நாய்களும் இடம்பெற்றுள்ளன. இது தவிர, இந்தியாவில் இருந்து மருத்துவக் குழுக்கள், மருந்து பொருட்கள், நிவாரண பொருட்களும் துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவுடன் ஜூலி, ரோமியோ, ஹனி மற்றும் ரேம்போ ஆகிய மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவற்றிற்கு சிறப்புப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை இடிபாடுகளுக்கு இடையே மனிதர்கள் சிக்கியிருந்தால் தங்கள் மோப்ப சக்தியின் உதவியால் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து காட்டிக் கொடுக்கும்.