பிரான்சில் பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்
கடற்கரை, பூங்காக்கள், காடுகள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் புகைபிடிப்பதற்கு தடை விதிக்க உள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புகையிலை ஒழிப்பு திட்டத்தின் சார்பாக நடைபெற்ற சந்திப்பின் போது செய்தியாளர்களை சந்தித்த பிரான்சின் சுகாதார துறை அமைச்சர் ஒரெலியன் ரூசோ (Aurelien Rousseau) ‘பிரான்சில் ஏற்கனவே 7200 புகைப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகள் உள்ளன. அவை மத்திய அரசால் நிர்வகிக்கப்படுவதில்லை. மாறாக, உள்ளூர் அரசு நிர்வாகத்தினால் செயல்படுத்தப்படுகின்றன’ என்ற அவர்,
‘தற்போது 11 யூரோக்களாக உள்ள சிகரெட் விலைகளும், 2025 இல் 12 யூரோக்களாகவும், அடுத்துவரும் காலங்களில் 13 யூரோக்களாகவும் உயர்த்தப்படும்.
இளைஞர்களிடம் மிக பிரபலமாக உள்ள மின் சிகரெட்களையும் தடை செய்ய பிரெஞ்சு அரசாங்கம் முடிவு எடுத்துள்ளது’ என்றும் கூறியுள்ளார்.
பிரெஞ்சு அதிபர் உறுதியளித்துள்ள படி வருகின்ற 2032 ஆம் ஆண்டுக்குள் அரசு ‘புகையிலை இல்லாத முதல் தலைமுறையை உருவாக்க’ எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘புகைப்பிடிப்பதை வேடிக்கையாக, பொழுதுபோக்காக எண்ணும் மனப்போக்கு மாறவேண்டும். ஒவ்வொரு நாளும் புகைப்பழக்கத்தால் இறக்கும் 200 பேரின் மரணங்களை தடுக்க முடியும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தடை எப்போது அமலுக்கு வரும் என்பதை அமைச்சர் குறிப்பிடவில்லை என்றாலும் அடுத்தாண்டு துவக்கத்திலிருந்து அபராதங்கள் விதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.
ஏற்கனவே கடந்த செப்டம்பரில் மின் சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்படும் என பிரெஞ்சு அரசு கூறியது குறிப்பிடத்தக்கது.