மர்சேயில் நடைபெற்ற கலவரத்தின் போது இறந்த முகமது என்பவரின் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 5 காவலர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் நகேல் என்னும் இளைஞர் காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டதன் எதிரொலியாக நாடு முழுவதும் பல இடங்களில் கலவரங்கள் வெடித்தன. பிரான்சின் மர்சே நகரில் ஏற்பட்ட கலவரத்தில் முகமது என்னும் இளைஞர் கொல்லப்பட்டார்.
காவலர்களின் தாக்குதலால் அவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது தொடர்பாக ஆயுதப்படை காவலர்களிடம் விசாரணை நடை பெற்று வந்தது.
விசாரணையின் முடிவில் மூன்று காவலர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் ஆயுதத்தை வைத்து வன்முறையை மேற்கொண்டதாக கூறப்பட்டு காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்டமாக ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களில் மூன்று பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர் இருவர் சாட்சிகளாக கருதி விடுவிக்கப்பட்டனர்.
பிரான்சின் ஜூலை கலவரத்தின் போது கொல்லப்பட்ட ஒரே நபர் முகமது என்பது குறிப்பிடத்தக்கது.
27 வயதான முகமது அவருடைய தாயார் வசிக்கும் வீட்டின் கட்டிடத்தின் அருகே தனது வண்டியிலிருந்து கீழே இறங்கி சுருண்டு விழுந்து இறந்துள்ளார். இதற்கு கலவரத்தை அடக்க காவலர்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் புல்லட் தான் காரணம் என உறுதிப்படுத்தப்பட்டது. Flash-ball எனப்படும் பிளாஸ்டிக் புல்லட் அவர் நெஞ்சை தாக்கியதால் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.