சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் சீனாவில் இருந்துவரும் பயணிகள் தங்கள் பயணத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளன. குறிப்பாக, சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கியுள்ளன.
சீன சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு நாடுகளும் பயண கட்டுப்பாடு விதித்துள்ளது அரசியல் நோக்கத்தை கொண்டது என அந்நாட்டு அரசு விமர்சித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாசே நிங் கூறுகையில், “சில நாடுகள் சீனப் பயணிகளை மட்டுமே கொரோனா பரிசோதனை சான்றிதழ் அவசியம் என்று கட்டாயப்படுத்தி கேட்கின்றன. இந்த மாதிரியான நெருக்கடியின் பின்னணியில் அடிப்படை அறிவியல் உண்மை இல்லை. இது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. அவ்வாறாக சீனர்களை மட்டும் நெருக்குதலுக்கு உள்ளாக்கும் நாடுகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
‘தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசியல் நோக்கங்களுக்காக கையாளும் முயற்சிகளை அரசாங்கம் உறுதியாக எதிர்க்கிறது, மேலும் பரஸ்பர கொள்கையின்படி அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்’ என்றும் குறிப்பிட்டார்.
சீனா கடைசியாக டிசம்பர் 24ம் தேதி வெளியிட்ட தினசரி கொரோனா பாதிப்பு குறிப்பில், 5 ஆயிரத்துக்கும் குறைவாக எண்ணிக்கையே பதிவாகி இருப்பதாக குறிப்பிட்டிருந்தது. ஆனால், தினசரி தொற்று எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது என்றும் இந்த மாதத்தில் 40 லட்சம் என்ற அளவில் இந்த எண்ணிக்கை உச்சத்தை தொடலாம் என்றும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.