Thursday, February 19, 2026

52வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர்.கவாய்

by Editorial Team
0 comments

உச்ச நீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் (B.R. Gavai) இன்று (மே 14) பதவியேற்றுக் கொண்டார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து பி. ஆர். காவாய் பதவியேற்றுள்ளார்.

அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ராஷ்டிரபதி பவனில் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில் துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்றார். அவரது பதவிக் காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இவரது ஓய்வை தொடர்ந்து இந்தியாவின் 52 ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை குடியரசுத் தலைவர் 29ஆம் தேதி நியமித்தார். இதனையடுத்து அவர்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.  

பதவிக்காலம் 

நீதிபதி பி.ஆர்.கவாயின் பதவிக்காலம் நவம்பர் 2025 இல் முடிவடைய உள்ளதால் ஆறு மாதங்களுக்கு மட்டுமே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார். இவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கும் முதல் பௌத்த நீதிபதி என்பதும், முன்னாள் தலைமை நீதிபதி கே ஜி பாலகிருஷ்ணனுக்கு பிறகு தலைமை நீதிபதியாக பதவியேற்கும் இரண்டாவது தலித் நீதிபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

கவாயின் வரலாறு

கவாய், மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் 1960 ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி பிறந்துள்ளார். 1985 இல் தனது 25 ஆவது வயதில் சட்ட பணியை தொடங்கினார். 2007 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிறகு மும்பையில் உள்ள உயர் நீதிமன்றத்தின் முதன்மை இருக்கையிலும், நாக்பூர் அவுரங்காபாத் மற்றும் பனாஜியில் உள்ள அமர்வுகளிலும் பணியாற்றியுள்ளார். 2019 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 

இவரது தந்தை, தாதாசாஹிப் என்றழைக்கப்படும் ராமகிருஷ்ண சூர்யபன் கவாய், பிரபல தலித் தலைவர் ஆவார். அவர் பீகாரின் முன்னாள் ஆளுநராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.      

நீதிபதி கவாய் தனது மனதில் பட்டதை கூறும், மிகவும் துணிச்சல் மிக்க முடிவுகளை எடுக்கும் நீதிபதியாக அறியப்படுகிறார். தேர்தல் பத்திர திட்டத்தை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்தது, சட்டப்பிரிவு 370ஐ அரசியல் அமைப்பு சாசனத்திலிருந்து மத்திய அரசு நீக்கியது செல்லும் என்று  தீர்ப்பளித்தது போன்ற முக்கிய தீர்ப்புகளில் இவர் இடம் பெற்றுள்ளார். 

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை விடுவிக்க உத்தரவிட்ட நீதிமன்ற அமர்வுக்கு தலைமை வகித்தார். டெல்லி துணை முதலமைச்சர் மணி சிசோதியாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட வழக்கில் தனிமனித சுதந்திரத்தை நிலை நாட்டினார். மேலும் பட்டியல் இனத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்று தீர்ப்பளித்த அரசியல் சாசன அமர்விலும் கவாய் இடம் பெற்றிருந்தார்.

தற்போது பதவி பிரமாணம் முடிந்த நிலையில், அனைத்து நீதிபதிகள் கூட்டத்தை கூட்டி நீதிமன்றத்தின் வருங்கால பணிகள் குறித்து கவாய் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech