ராணுவ கர்னல் சோபியா குரேஷியின் மதம் குறித்த மத்திய பிரதேச மாநில அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் பேச்சுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்னும் நடவடிக்கையை இந்திய பாதுகாப்புப் படை முன்னெடுத்தது. ராணுவ நடவடிக்கைகள் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் இணைந்து ராணுவ கர்னல் சோபியா குரேஷியும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அண்மையில் மத்திய பிரதேச பாஜக அமைச்சர் விஜய் ஷா ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேசுகையில், கர்னல் சோபியாவை தீவிரவாதிகளின் சகோதரி என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இந்திய சகோதரிகளின் குங்குமத்தை அழித்த தீவிரவாதிகளை, அவர்களது சகோதரிகளை (சோபியா குரேஷி) வைத்தே பிரதமர் மோடி அழித்தொழித்து விட்டார்’ என்றார்.
நாட்டுக்காக உயிரை பணயம் வைத்து சேவையாற்றும் ராணுவ கர்னலை அவரது மதத்தை வைத்து தீவிரவாதிகளுடன் இணைத்து பேசிய அமைச்சரின் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. மத்தியபிரதேச அமைச்சரவையில் இருந்து அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்ட விஜய் ஷா, சோபியா குரேஷி தனது உடன் பிறந்த சகோதரி போன்றவர், அவரிடம் ஒரு முறையல்ல 100 முறை கூட மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறினார்.
எனினும், மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் அமைச்சர் விஜய் ஷா மீது தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. அமைச்சரின் பேச்சு மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி வெறுப்பை வளர்க்கும் விதமாக உள்ளது என்று கடுமையாக விமர்சித்துள்ள நீதிமன்றம், அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்படி 152 (நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை முதலியவற்றுக்கு பங்கம் விளைவிப்பது), 196(1)(b) (மதத்தின் பெயரில் பிரிவினையை வளர்ப்பது), 197(a)(c) (பெண்ணின் மாண்பை குலைக்கும் விதமாக பேசுவது) முதலிய பிரிவுகளில் முதல் தகவலறிக்கை பதிவு செய்ய மத்திய பிரதேச டி.எஸ்.பிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை தடை செய்யக்கோரி அமைச்சர் விஜய் ஷா தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில், உச்சநீதிமன்றம் அவரின் மேல்முறையீட்டை நிராகரித்திருக்கிறது.
‘ஒரு அமைச்சராக பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு இது போன்ற பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை பேசுவதா?’ என்று அமைச்சரை சரமாரியாக கேள்விகளால் விலாசியிருக்கிறது நீதிமன்றம்.