நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாளில் அவரையும் நாட்டின் ராணுவ வீரர்களையும் பெருமைப்படுத்தும் விதமாக அந்தமானில் உள்ள பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு 21 ராணுவத்தில் உயரிய விருதுகள் பெற்ற வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
ராணுவத்தின் மிக உயரிய விருதானது பரம்வீர் சக்ரா விருது. போர்க்களத்தில் மிக தீவிரமான சாகசத்தை செய்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்திய அரசு இந்த பரம்வீர் சக்ரா விருதை வழங்குகிறது. இதுவரை இவ்விருதை 21 ராணுவ வீரர்கள் பெற்றுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக பங்கேற்று இவ்விழாவிற்கு தலைமை தாங்கினார். தீவுகளுக்கு 21 வீரர்களின் பெயரை சூட்டி உரையாற்றிய பிரதமர் மோடி, “நாட்டின் மூவர்ணக்கொடி முதல் முதலாக அந்தமானில் தான் ஏற்றப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் அரசும் அந்தமானில்தான் உருவானது. நேதாஜி பிறந்த இந்நாளில் நாட்டின் உண்மையான நாயகர்களுக்கு பெருமை தரும் விதமாக அவர்களின் பெயர்களை அந்தமான் தீவுகளுக்கு சூட்டியுள்ளோம்” என்றார்.
2018ஆம் ஆண்டில் அந்தமான் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள ரோல் தீவின் பெயரை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என மாற்றினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் அவருக்கு தேசிய நினைவகம் ஒன்று கட்டப்படுகிறது. அதன் மாதிரியையும் இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.