இந்தியாவின் 74வது குடியரசு தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்தியாவின் குடியரசு தின கொண்டாட்டங்கள் இன்று காலை 10.30 மணிக்கு டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதையில் நடைபெற்றது.
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மூவர்ணக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
திரௌவுபதி முர்மு குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்ற பின், கொடியேற்றும் முதல் குடியரசு தினம் இது.
பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற இந்த குடியரசு தின விழாவில், எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து ராணுவத்தினரும் பங்கேற்றுள்ளனர்.
இந்திய குடியரசு தின விழாவுக்கு எகிப்து நாட்டின் அதிபர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கலந்து கொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி, கடமையின் பாதையை ஒட்டி இந்தியா கேட் அருகே உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
கடந்த ஆண்டு கொண்டாட்டங்களின் அடிப்படையில், 75ஆம் ஆண்டு சுதந்திர தினமான ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ நிகழ்வின் அங்கமாக இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டின் சார்பில் இந்த ஆண்டு பங்கேற்ற அலங்கார ஊர்தி, சங்க காலம் தொட்டு சமூக வளர்ச்சி, மேம்பாடு மற்றும் சமூக மாற்றத்துக்கு உதவிய பெண்கள் வழங்கிய பங்களிப்பை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆத்திச்சூடி, கொன்றை வேந்தனை இயற்றிய ஒளவையார், கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக தீரத்துடன் போரிட்ட வீர மங்கை வேலுநாச்சியார் ஆகியோரின் உருவங்கள் அலங்கார ஊர்தியின் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.
ஊர்தியின் பின்பகுதியில் சோழப்பேரரசர் கட்டிய தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலின் மாதிரி வடிவம் நிறுவப்பட்டுள்ளது. அலங்கார ஊர்தியுடன் கொம்பு மேளம், நாதஸ்வரம், தவில் வாசித்தபடி இசைக்கலைஞர்கள் செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.