வாளால் காவலரை தாக்கிய நபரை வெர்சய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தன்று, ஒரு காவல் துறை அதிகாரி தனது சொந்த வாகனத்தில் சென்றபோது, பேருந்தில் இருந்து இறங்கிய பெண்ணொருவர் தனது பையால் அவரது கார் மீது இடித்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் அதிகரித்ததால் அப்பெண்ணின் கணவர் தலையிட்டு காவலரை கீழே தள்ளி, மறைத்து வைத்திருந்த வாளின் பட்டைவாட்டில் அவருடைய முதுகில் அடித்துள்ளார்.
தாக்கப்பட்ட அக்காவலர் தன்னுடைய அடையாள அட்டை, காவல் துறை கைப்பட்டை ஆகியவற்றை காட்டியதும் அவரை தாக்கியவர் உடனடியாக அங்கிருந்து ஓடி மறைந்துவிட்டார். தன்னை தாக்கியவர் யாரென்று காவலரால் அடையாளம் காண முடியவில்லை.
காவல் நிலையத்தில் வெர்சய் நகர பாதுகாப்பு புலனாய்வாளர்கள் வீடியோ பாதுகாப்பு கேமராக்களில் பதிவான காட்சியின் மூலம் தங்கள் விசாரணையைத் தொடங்கினர். ஏற்கனவே இருந்த குற்றவியல் வழக்கு பதிவேடுகளிலும் அவர்களின் அடையாளங்களை வைத்து தேடியுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான ஒரு குற்றவாளியின் கைப்பேசி சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து 200 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருந்துள்ளது. உடனடியாக காவல்துறையினர் அவரை கடந்த புதன்கிழமையன்று கைது செய்தனர். அவர் வீட்டின் அடித்தளத்திலிருந்து வாள் கைப்பற்றப்பட்டதோடு, குற்றம் நடந்த அன்று அவர் அணிந்திருந்த உடையும் கண்டெடுக்கப்பட்டது.
காவலில், 40 வயதான அவர் தனது மனைவியைப் பாதுகாக்க வாளைப் பயன்படுத்தியதாக கூறியுள்ளார். தன்னுடைய மனைவியை அந்த காவல் தாக்கியதாக அவர் நினைத்ததாகவும், அதனாலேயே அவர் வாளால் தாக்கியதாகவும், அவரொரு ஒரு காவலர் என்று அவருக்குத் தெரியாது எனவும், அவரைக் காயப்படுத்தும் நோக்கம் ஏதுமில்லை, அவரை பயமுறுத்த வேண்டும் என்றே அப்படி செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
வெர்சய் நீதித்துறை நீதிமன்றத்தில் அவர் விரைவில் விளக்கமளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.