புர்கினா பாசோவின் தலைநகரான உகாடோகுவில் (Ouagadougou) வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கானோர் பிரான்சுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புர்கினா பாசோவிற்கும் அதன் முன்னாள் காலனியாதிக்க நாடான பிரான்சுக்கும் இடையிலான உறவுகள் கடந்த ஆண்டு இரண்டு இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புகளைத் தொடர்ந்து மோசமடைந்துள்ளன. ஜிகாதி நடவடிக்கைகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க அதிகாரிகள் தவறியதன் காரணமாக போராட்ங்கள் தூண்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புர்கினா பாசோவில் பிரான்சின் இராணுவ இருப்பு நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தவில்லை என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கிளர்ச்சியாளர்களால் பாதிக்கப்பட்ட மேற்கு ஆபிரிக்க நாட்டில் வளர்ந்து வரும் பிரெஞ்சு-எதிர்ப்பு உணர்வின் சமீபத்திய வெளிப்பாடான இந்த போராட்டம், பெரும்பாலும் அமைதியானதாகவும், எந்தவித அசம்பாவிதமும் இன்றி முடிவடைந்ததாகவும் சம்பவ இடத்தில் இருந்த ராய்ட்டர்ஸ் செய்தியாளர் தெரிவித்தார்.
முன்னதாக சில ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரெஞ்சு தூதரகம், கலாச்சார மையம் மற்றும் இராணுவ தளம் முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
பொய்யானவை என்றும் இஸ்லாமிய போராளிகளுக்கு குரல் கொடுத்ததாகவும் கூறி பிரான்சின் RFI வானொலி ஒளிபரப்பை அதிகாரிகள் டிசம்பரில் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த மாத தொடக்கத்தில், பிரான்ஸ் தூதரை மாற்றுமாறு அரசாங்கம் கோரியிருந்தது.
மாலியில் (Mali) இருந்து சஹேல் (Sahel) முழுவதும் பரவியுள்ள இஸ்லாமிய கிளர்ச்சியார்களை எதிர்த்துப் போராட உள்ளூர் படைகளுக்கு உதவ புர்கினா பாசோவை தளமாகக் கொண்டு சுமார் 400 சிறப்புப் படைகளை பிரான்ஸ் களமிறக்கியுள்ளது.
இதுவரை நடைபெற்ற வன்முறைகளில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர், இருபது இலட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த வன்முறையினால் அங்கு உணவு பற்றாக்குறை ஏற்படும் சூழல் அதிகரித்துள்ளது.
புர்கினா பாசோவில் கடந்த வாரம் ஆயுதம் தாங்கிய தாக்குதல்காரர்களால் கடத்தப்பட்ட 60 க்கும் மேற்பட்ட பெண்களை அதிகாரிகள் இன்னும் தேடி வருகின்றனர். 2020 ஆகஸ்டு மாதம் நடந்த இராணுவப் புரட்சிக்குப் பின்னர் பாரிசுக்கும் பமாகோவுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன. பிப்ரவரி 2022 இல், பிரான்ஸ் புர்கினோ ஃபாசோவிலிருந்து தனது படைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தது.