அமெரிக்க வங்கி அதிகாரி ஒருவர் குடிபோதையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட சம்பவத்தை தவறாக கையாண்டதற்காக ஏர் இந்தியாவுக்கு 37,000 டாலர் (சுமார் 34,000 யூரோக்கள்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 26 ஆம் தேதி நியூயார்க்-புதுடெல்லி சென்ற விமானத்தில், வணிக வகுப்பில் (Business Class) அமர்ந்திருந்த 72 வயது மூதாட்டி மீது சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபர் இதை மறுத்துள்ளார்.
இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ஏர் இந்தியாவின் விமான சேவை இயக்குநருக்கு 300,000 ரூபாய் (சுமார் 3,400 யூரோக்கள்) அபராதம் விதித்துள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இதற்கிடையில், விமானத்தில் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கத்தை உறுதி செய்வதில் “தனது கடமையில் தோல்வியுற்றதற்காக” அவ்விமானத்தை ஓட்டிய விமானியின் உரிமம் மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. பின்னர் பாதிக்கப்பட்ட பெண் நிலைமை குறித்து புகார் அளித்தார், இந்த செய்தி ஊடகங்களில் பரவலாக வெளியானதை அடுத்து, போலீசார் அந்த நபரை சில வாரங்களுக்குப் பிறகு கைது செய்தனர்.
இச்சம்பவம் நடைபெற்ற பிறகு சங்கர் மிஸ்ரா என்ற இந்திய குடியுரிமையுள்ள அவர், விமானம் தரையிறங்கிய பிறகு எவ்வித நடவடிக்கைகளும் இல்லாமல் வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க வங்கியான Wells Fargo இக்குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை துணைத்தலைவர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஏற்பட்ட கடும் விமர்சனங்களினால் வேறுவழியின்றி ஏர் இந்தியா தலைமை நிர்வாகி காம்ப்பெல் வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சங்கர் மிஸ்ராவுக்கு தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டுள்ளது. சங்கர் மிஸ்ராவின் தரப்பு தொடர்ந்து இக்குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.
கடந்த சில மாதங்களில் நிகழ்ந்து வரும் விமான ஊழியர்களுடனான சண்டைகள் மற்றும் வாக்குவாதங்களைத் தொடர்ந்து, இந்தியாவின் வளர்ந்து வரும் விமானத் துறைக்கு இது அண்மைச் சம்பவமாகும்.
கடந்த மாதம் பாரிசில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் குடிபோதையில் இருந்த ஒரு பயணி, ஒரு பெண்ணின் போர்வையில் சிறுநீர் கழித்ததாக குற்றம் சாட்டப்பட்டது, ஆனால் அந்த நபர் மன்னிப்பு கோரியதால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.