அமெரிக்காவில் இளைஞர்கள், இளம்பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கூடிய விருந்து நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானார்கள்.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்திலுள்ள டக்ளஸ் கவுண்டியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று முன்தினம் பிறந்த நாள் விருந்து ஒன்று நடைபெற்றது.
அந்த வீட்டின் உரிமையாளர் தனது மகளின் 16-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ‘ஸ்வீட் 16’ எனப்படும் விருந்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.
இந்நிகழ்விற்காக 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அங்கு கூடியிருந்தனர்.
அப்போது திடீரென அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்துள்ளது.
இதில் 2 பேர் பலியானார்கள். 6 பேர் காயமடைந்தனர். சிலர் காயங்களுடன் வெளியே ஓடி தப்பி உள்ளனர்.
வீட்டின் உரிமையாளர் விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்களில் சிலர், கஞ்சா போதை பொருளை புகைத்தபடி இருந்தனர் என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், அந்த பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் நடந்த விருந்தில் ஏற்பட்ட மோதலால் துப்பாக்கிச்சூடு நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும் இந்நிகழ்வு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.