பிரான்சின் மர்சே நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றின் வாகன நிறுத்தத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளம் வயது பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
பிரான்சின் முக்கிய நகரங்களில் ஒன்றான மர்சேக்கு அருகில் உள்ள துலோன் (Toulon) நகரில், மெக் டோனால்ட் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது.
உணவகத்தின் வாகன நிறுத்தத்தில் நின்றிருந்த காரின் மீது மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் ஏகே 47 துப்பாக்கியினால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர்.
இதில், காரின் முன் இருக்கையில் இருந்த ஓட்டுனரும் உடன் இருந்த பயணியும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
மேலும் காரின் பின்பகுதியில் அமர்ந்திருந்த இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மூன்று பேர் இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்தனர். அவர்களில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
காயமடைந்தவர்களில் மூவர் காவல்துறையினருக்கு ஏற்கனவே போதை மருந்து விவகாரத்தில் அறியப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
இரவு 11 மணியளவில் மர்சையின் 16வது வட்டத்தில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.
காயமடைந்தவர்களில் 29 வயது இளைஞர் ஒருவருக்கு நெஞ்சில் குண்டுகள் பாய்ந்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
காவல்துறை நடத்திய தடயவியல் ஆய்வில் துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு அருகே முழுவதும் எரிந்து கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
போதை மருந்து தொடர்பான விவகாரங்களினால் மர்சே நகரில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
இந்த ஆண்டு மட்டும் மர்சே நகரில் 45 பேர் வன்முறைகளினால் கொல்லப்பட்டுள்ளனர்.
மர்சே பிரான்சின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்தும், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட கும்பல் யார் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.