வெளிநாட்டினரை நாடு கடத்தும் மசோதா மீதான விவாதம் துவக்கம்!

by Editorial Team
0 comment

பிரான்சுக்குள் குற்றங்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை நாடு கடத்துவது தொடர்பான மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளது.

பிரான்சுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான குடிவரவு சட்டத்தை கடுமையாக்கும் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மசோதாவை பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த நவம்பர் 6-ஆம் தேதி முதல் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆனால், இந்த சட்டம் புகலிடம் கோருபவர்கள் மற்றும் புலம்பெயர்வோரின் உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மனித உரிமை அமைப்புக்கள் விமர்சித்துள்ளன.

பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மானின், இச்சட்டத்தை கொண்டுவருவதில் உறுதியுடன் இருப்பதாக கூறியுள்ளார். 

‘இந்த மசோதா பிரான்சில் குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களிடம் கடுமையாக இருக்கவும், அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதை கருத்தில் கொண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்று அவர் பிரான்ஸ் 2 தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பேசும்போது கூறினார்.

இந்த சட்ட நடவடிக்கை “பொது ஒழுங்கிற்கு பெரும் அச்சுறுத்தல்” என்று கருதப்படும் வெளிநாட்டினரை நாடு கடத்துவதற்கான செயல்முறையை வலுப்படுத்தும், வெளியேற்ற துரிதப்படுத்தும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.

அதே நேரத்தில், அதிபர் திரு. இமானுவேல் மக்ரோனின் ஆளும் மையவாத அரசாங்கத்தின் தீவிர வலதுசாரி உறுப்பினர்களில் ஒருவராகக் கருதப்படும் தர்மானின், ‘இந்த மசோதா பிரான்சுக்குள் அனுமதியின்றி நுழைந்த மக்களை அங்கீகரித்து, அவர்களை சட்டப்பூர்வமாக்க வழி வகை செய்யும்’ என்று கூறியுள்ளார்.

தொழிலாளர் பற்றாக்குறையுள்ள குறிப்பிட்ட துறைகளில் வேலை செய்யும் முறையான ஆவணங்கள் இல்லாத தனிநபர்களுக்கு, சில நிபந்தனைகளின் கீழ் சட்டபூர்வமான அந்தஸ்து வழங்கப்படும் என்ற விதி இந்த சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

“அரசியல் ரீதியான ஒரு சமரசத்தை கண்டறிந்தாக வேண்டும். இதில் பொதுவான நலன்தான் மிக முக்கியம்” எனக் குறிப்பிட்டார் தர்மானின்.

செனட் விவாதம் என்பது நீண்ட, கடினமான சட்டம் இயற்றும் பயணத்தின் முதல் படியாகும்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லாததால் இந்த மசோதா ஏற்கனவே பல முறை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக பிரான்சுக்குள் நுழைந்த தொழிலாளர்களுக்கு சட்டபூர்வமான அந்தஸ்தை வழங்குவதை எதிர்க்கும் பழமைவாத கட்சியினர், பாராளுமன்றத்தின் மேல் சபையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர், 

இந்த நடவடிக்கை பிரான்சுக்குள் மேலும் புலம்பெயர்ந்தோரை வர ஊக்குவிக்கும், உள்ளே இழுக்கும் விளைவை உருவாக்கும் என்று வாதிட்டு வருகின்றனர்.

திங்களன்று பிரான்ஸ் இன்டர் வானொலியில் பேசிய பிரதமர் எலிசபெத் போர்ன், பழமைவாதக் கட்சியினரின் இந்த கூற்றை நிராகரித்ததோடு, இந்தத் திட்டம் “பல்லாண்டுகளாக நமது நாட்டில் நம்முடன் ஒன்றாக வசித்து வரும் பல வெளிநாட்டு மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும்” என்று கூறியுள்ளார்.

இந்த மசோதா மீதான விவாதம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தின் கீழ் சபையான தேசிய சட்டமன்றத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மக்ரோனின் மையவாத கூட்டணிக்கு அதிக இடங்கள் உள்ளன. ஆனால் பெரும்பான்மை இல்லை. இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு பழமைவாத சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் தேவைப்படும்.

இந்த ஒட்டுமொத்த சட்ட நடைமுறையும் புலம்பெயர்ந்தோரின் உரிமைக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக பல்வேறு சமூக நல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

“பிரெஞ்சு அரசு மீண்டும் ஒரு தவறான குடியேற்ற நடவடிக்கையினை முன்வைக்க முயற்சிக்கிறார்கள்” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த ஐரோப்பிய ஆய்வாளரான ஈவா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“குடும்பங்களைப் பிளவுபடுத்துவது மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான உரிமைகளை நீர்த்துப்போகச் செய்வது நாட்டின் பாதுகாப்பு சிக்கல்களுக்கு தீர்வாகாது” என்றும் கூறியுள்ளார்.

மனித உரிமை கூட்டமைப்பு, அரசாங்கத்தின் இந்த முன்மொழிவு “அடக்குமுறைக் கருத்துக்கள அடிப்படையாகக் கொண்டது” என்று கூறி கண்டனம் தெரிவித்துள்ளது.

“புலம்பெயர்ந்து வாழும் மக்களின் உரிமைகளை போதுமான அளவு பாதுகாக்கத் தவறிய மேலும் ஒரு மசோதா இது. அதோடு அவர்களின் நிலையை மேலும் சீரழிக்கும்” என்று கருதுவதாக பிரான்சின் அம்னஸ்டி இன்டர்நேஷனல் டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech