பிரான்சில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு –  250 ஊர்கள் கடும் பாதிப்பு

by Special Correspondent
0 comment

கடும் மழை காரணமாக பிரான்சின் வடக்கு பகுதியில் உள்ள 250 ஊர்களை பேரிடர் பாதித்த பகுதிகளாக பிரான்ஸ் அதிபர் மக்ரோன் அறிவித்துள்ளார்.

முன்னதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோன் நேரில் பார்வையிட்டார்.

பா-தெ-கலே (Pas-de-Calais) மற்றும் நோர் (Nord) மாவட்டங்களில் உள்ள பல ஊர்கள் கடும் மழையாலும், ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

வரும் நாட்களில் வெள்ளத்தின் அளவு இன்னும் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிலர் தங்கள் வீடுகளுக்கு ஏற்கனவே திரும்பியுள்ளனர்.

Pas-de-Calais மாவட்டத்தில் 214 ஊர்களும், நோர் மாவட்டத்தில் 30 ஊர்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக நேரில் பார்வையிட்ட அதிபர் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் வெள்ள நிவாரண நிதியாக 50 மில்லியன் யூரோக்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சியரன் (Ciaran) புயலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து அந்த மாநிலம் மெல்ல மீண்டு வந்த நிலையில் தற்போது கன மழையினால் பல ஊர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

கடந்த செவ்வாய்கிழமை, வானிலை ஆய்வு மையம் Pas-de-Calais மாவட்டத்தை ஆரஞ்சு எச்சரிக்கையின் கீழ் வைத்திருந்தது.

279 ஊர்களிலும் பள்ளிகள் இரண்டாவது நாளாக மூடப்பட்டிருந்தன.

மக்கள் மிகுந்த கவலையுடனும், விரக்தியுடனும் இருப்பதாக Blendecques நகர துணை மேயர் ஜான் கிறிஸ்தோப் தெரிவித்துள்ளார்.

‘பாதுகாப்பு மையங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மக்கள் இன்னமும் தங்கியுள்ளனர். 862 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வரும் நாட்களின் வானிலை நிலவரம் எதிர்ப்பார்க்கும்படி நல்லதாக இல்லை’ என்றும் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்காக செஞ்சிலுவை சங்கம் பாதுகாப்பு மையங்களை உருவாக்கியுள்ளது.

கடந்த நவம்பர் ஆறாம் தேதி முதல் நோர் மாவட்டத்தில் பத்தாயிரம் வெள்ள பாதிப்புகளும், 1391 வெளியேற்றங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவுப்பொருட்களை நன்கொடையாக வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech