சிரிய அதிபர் அசாதை கைது செய்ய பிரான்ஸ் உத்தரவு!

by Special Correspondent
0 comment

போர் குற்றம் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்காக சிரிய அதிபர் அசாதை கைது செய்ய பிரெஞ்சு அரசு சர்வதேச கைது வாரண்டை பிறப்பித்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிரிய போரின் போது, டமாஸ்கஸ் நகரத்தில் நச்சுவாயுக்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் 1400 பேர் மூச்சுத் திணறி கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக சிரிய அரசு மீது பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சிரியாவை சேர்ந்த அரசு சாரா நிறுவனங்களான பேச்சுரிமை மற்றும் ஊடக மையம் (Syrian Centre for Media and Freedom of Expression (SCM), அரசு சாரா வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட மூன்று அமைப்புகள் பன்னாட்டு நீதிமன்றத்தில் சிரியாவில் நடைபெற்ற போர் குற்றங்கள் குறித்து முறையிட்டன.

முதன்முறையாக ஒரு நாட்டின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஒருவர் மீது இன்னொரு நாடு மனித உரிமைகள் மற்றும் போர் குற்றத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வாரண்ட் பிறப்பித்துள்ளதாக அந்த அமைப்புகள் கூறியுள்ளன.

சிரிய அதிபரோடு சேர்த்து அவரின் சகோதரர் மஹர், சிறிய ராணுவத்தின் உயர்மட்ட பிரிவு மற்றும் இரண்டு தளபதிகளுக்கும் கைது பிறப்பிக்கப்பட்டுள்ளது

உலகளாவிய நீதிக்கான வரையறையின் கீழ் பிரான்ஸ் எந்த நாட்டின் மீதும், எவர் மீதும் போர் குற்றம் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான செயல்பாடுகள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க முடியும்.

மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் பாரிசின் நீதிமன்ற பிரிவு இந்த வாரண்டுகளை பிறப்பித்துள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு சிரியாவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் நச்சுவாயு தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளையும், அதனால் கொல்லப்பட்டவர்களின் உடல்களையும் (அதில் பலர் குழந்தைகள்) காணொளி பதிவு செய்து youtube இல் வெளியிட்டிருந்தனர்.

மேலும், பல குழந்தைகள் சுயநினைவின்றியும், நுரை தள்ளியும் அந்த வீடியோவில் காணப்பட்டனர்.

இந்த காணொளி பலத்த பரபரப்பினையும் சர்ச்சையையும் உலகளவில் ஏற்படுத்தியது.

ஐக்கிய நாடுகள் சபை இது சரி நச்சுவாய் தாக்குதல் என்பதை உறுதிப்படுத்தியது.

2013 ஆம் ஆண்டு சிரியா நாடு ரசாயன ஆயுதங்களை கைவிட்டு ரசாயன ஆயுதங்களுக்கு எதிரான நாடுகளின் குழுவில் இணைந்தது.

இருப்பினும் அந்த அமைப்பு டமாஸ்கஸ் நகரத்தில் நடைபெற்ற பல ரசாயன தாக்குதல் குறித்து சிரியா மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தது.

இதை சிரியா அரசு மறுத்து வந்தது.

சிரியாவில் நடைபெற்று வந்த போரில் கிட்டத்தட்ட ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். பலர் புலம்பெயர்ந்தனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் மீது நச்சு வாயுக்களால் தாக்குதல் நடத்திய குற்றத்தின் பெயரில் சிரியா நாடு மீது பன்னாட்டு நீதிமன்றம் வருகின்ற வியாழக்கிழமை விசாரணை நடத்த உள்ளது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech