மக்களுக்கு இடையூறாக இருந்ததால் trottinette électrique எனப்படும் இருசக்கர மின் வண்டிகளுக்கு தடை விதித்துள்ளது பாரிஸ் நகர நிர்வாகம்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மின்-இரு சக்கர வண்டிகள் வாடகைக்கு விடப்படுவதைத் தடைசெய்யவேண்டும் என்று பெரும்பாலான மக்கள் வாக்களித்துள்ளனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பாரிசில் மின்-ஸ்கூட்டர்கள் எனப்படும் trottinette électrique-க்கு அனுமதி வழங்கப்பட்டது. சுதந்திரமாய் மின் இரு சக்கர வண்டிகளில் சுற்றித் திரிய அனுமதி வழங்கிய முன்னோடி நகரங்களில் பாரிசும் ஒன்று.
பாரிசில் சுமார் 15,000 மின் ஸ்கூட்டர்கள் புழக்கத்தில் உள்ளன.
இந்நிலையில் பிரான்சின் தலைநகர் பாரிசில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிலர் கண்மூடித்தனமாக வண்டியோட்டிச் செல்கின்றனர். இதனால், அனைத்து பாரிஸ் வாசிகளும் நடைபாதைகளில் நடக்கும்போதும், சாலைகளைக் கடக்கும்போதும் பதட்டமாக இருப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மின் வண்டிகளை தடை செய்வதற்காக பாரிசில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 89.03% வாக்குகள் மின் ஸ்கூட்டருக்கு எதிராக பதிவாகின. அதிகளவாக, 16வது வட்டத்தில் 91.77 % வாக்குகள் பதிவாகின.
இதனடிப்படையில் பாரிஸ் நகர நிர்வாகம் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
‘மின்சார ஸ்கூட்டர்களே நிறைய விபத்துக்களுக்கு காரணம்!’ என்று பாரிஸ் நகர மேயர் அன்னே ஹிடால்கோ தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டில் 24 பேர் மின்-ஸ்கூட்டர் தொடர்புடைய விபத்துகளில் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு 459 மின்-ஸ்கூட்டர் சம்பந்தப்பட்ட விபத்துகள் பதிவாயின.
சுய சேவை ஸ்கூட்டர்களை தடை செய்யும் முதல் ஐரோப்பிய தலைநகரமாக பாரிஸ் நகரம் மாறியுள்ளது.