மிசோரம் மாநிலத்தில் கட்டப்பட்டு வந்த ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான மிசோரமின் மாநில தலைநகர் ஐஸ்வாலில் இருந்து 21 கி.மீ., தொலைவில் உள்ள சாய்ராங் என்னும் ஊரில் கட்டப்பட்டு வ்ந்த ரயில்வே மேம்பாலம், இன்று காலை முற்பகல் 11 மணிக்கு பணியின் போதே இடிந்து விழுந்தது.
வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்களை இணைக்கும் ரயில்வே திட்டத்தின் படி கட்டப்பட்டு வரும் 130 மேம்பாலங்களில் ஒன்றாக பைரவி – சாய்ராங் இடையே இந்த பாலம் கட்டப்பட்டு வந்தது.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த ரயில்வே நிர்வாகம் உயர்மட்டக்குழு அமைத்துள்ளது.
“இடிபாடுகளில் இருந்து இதுவரை 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எஃக்கு பாலத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ள நான்கு பேரின் உடல்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று ரயில்வே மற்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து மாநில முதல்வர் சோரம்தங்கா, பிரதமர் மோடி ஆகியோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், வடகிழக்கு ரயில்வேயின் தலைமை செய்தித் தொடர்பாளர் உட்பட பல ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். வடக்கு மண்டலத்தின் மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்தினை பார்வையிட செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த பாலம், பைராபி மற்றும் சாய்ராங் ரயில் நிலையங்களுக்கு இடையே குருங் ஆற்றின் மீது கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.