ஆண்டுதோறும் ஜூலை 14 இரவு நடைபெறும் வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை இவ்வாண்டு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14 இரவு வாகன எரிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் பிரான்சில் நடைபெறுவது வாடிக்கையானது. 2022-ஆம் ஆண்டு ஜூலை 14 இரவு மட்டும் 423 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. 21 காவலர்களும், தீயணைப்பு வீரர்களும் காயமடைந்தனர்.
ஆனால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இவ்வாண்டு குறைவான குற்றச்செயல்களே நடைபெற்றுள்ளன என உள்துறை அமைச்சர் ஜெரால்டு தர்மானின் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு 255 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது, ஏழு காவலர்கள், ஷாந்தார்ம்கள், தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
வாணவேடிக்கைகள், பட்டாசுகள் தவறான விடயங்களுக்கு பயன்படுத்தப்படுவதால் அவற்றின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காவல்துறையினரை நோக்கி 51 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.2022-ஆம் ஆண்டு 333 சம்பவங்கள் பதிவாகின.
பாரிசில் காவல் வட்டத்தில் மட்டும் 53 பேர் கைது செய்யப்பட்டனர். இது கடந்த ஆண்டை விட 50% குறைவாகும்.
வால்-துவாசின் (Val-d’oise) கொனேஸ் (Gonesse) பகுதியில் காவல்துறை வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘ஜூலை 14 பாதுகாப்பு பணியில் 130000 காவலர்களும், ஆயுதப்படையினரும் நாடு முழுக்க ஈடுபடுத்தப்பட்டனர். சிறப்பு ஆயுத படைகளான GIGN, RAID, BRI போன்றவையும் களத்தில் உள்ளன’ என காவல்துறை தலைவர் லாரன் நுனே தெரிவித்துள்ளார்.
இல்-தெ-பிரான்ஸ் மாநிலத்தில் மட்டும் பத்தாயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
ஒரு சில நகர நிர்வாகங்கள் ஜூலை 14 கொண்டாட்டங்களை நடத்தவில்லை.