பிரான்ஸ் மக்களுக்கு தேசிய நாள் வாழ்த்து தெரிவித்து பேசிய பிரதமர் மோடி, உலகின் பழமையான மொழி தமிழ் என பிரான்ஸ் வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசினார்.
பிரான்ஸ் பஸ்தில் நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் வந்துள்ள பிரதமர் மோடி, பாரிசில், அந்நாட்டு இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
‘ இங்கு நீங்கள் ‘பாரத் மாதா கீ ஜே’ என கோஷமிடுவதை கேட்கும் போது எனக்கு இந்தியாவில் கேட்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. நான் பலமுறை பிரான்ஸ் நாட்டிற்கு வந்துள்ளேன். இம்முறை எனது வருகை சிறப்பானது.
நாளை தேசிய தினத்தை கொண்டாடும் பிரான்ஸ் மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை அழைத்த பிரான்ஸ் மக்களுக்கு நன்றி, நாளை எனது நண்பர் இம்மானுவேல் மக்ரோனுடன் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கிறேன். .
இது இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே உள்ள ஆழமான நட்புறவின் பிரதிபலிப்பாகும். உலகின் மிகப் பழமையான மொழியாக தமிழ் உள்ளது. உலகின் பழமையான மொழி இந்தியாவில் உள்ளது என்பதை விட வேறு என்ன பெருமை வேண்டும்.
‛ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும், தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்,’ என்ற திருக்குறளுக்கேற்ப, வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவின் முன்னேற்றத்துக்கு காரணமாக உள்ளனர்.
பழங்குடியின இனத்தைச் சேர்ந்த பெண்மணி இந்திய நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார். இந்தியா ஜனநாயகத்தின் தாயாக விளங்குகிறது. பிரான்சில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
ரொக்கமற்ற பரிவர்த்தனையை மேற்கொள்ளும் வகையில் இனி பிரான்சிலும் யுபிஐ பயன்படுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்தியா வேகமாக வளர்ந்து கொண்டு உள்ளது. உலகம் ஒரு புதிய பாதையை நோக்கி நகர்கிறது. இந்தியாவின் வலிமையும், பங்களிப்பும் மிக விரைவாக மாறுகிறது. பிரான்சின் மார்சேயில் புதிய இந்திய துணைத்தூதரகம் திறக்கப்படும். ஐரோப்பிய நாட்டில் முதுகலை பட்டம் பெறும் இந்திய மாணவர்களுக்கு ஐந்தாண்டு கால படிப்புக்கு பிந்தைய பணி விசா கிடைக்கும்.
பிரான்சில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா கவர்ச்சிகரமான திட்டங்களை கொண்டுள்ளது. நாடு வேகமாக முன்னேறி வருவதால் இந்திய முதலீட்டாளர்கள் அதன் பலனை பெற்று வருகிறார்கள் என்று கூறினார்.