18 வயது இளைஞர் ஒருவர் அவருடைய பெண் நண்பரின் சகோதரரால் கடுமையாக தாக்கப்பட்டு சேன் ஆற்றில் வீசப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பெண்ணின் சகோதரர் உட்பட ஆறு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தன்னுடைய சகோதரி ஆண் நண்பருடன் பழகுவதை தாங்க முடியாத பெண்ணின் சகோதரர் அந்த இளைஞரை தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து அவரை கடுமையாக தாக்கியுள்ளார். Montmagny (Val-d’Oise) – Gennevilliers (Hauts-de-Seine) ஆகிய இரு நகரங்களில் இவரை கடத்திச் சென்று ஆறு பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. அதன் பின் அவருடைய ஆடைகளை அவிழ்த்து சேன் ஆற்றில் வீசியுள்ளது.
ஸ்னாப் ஷாட் என்னும் செயலி மூலம் அறிமுகமான பெண் ஒருவரை அந்த இளைஞர் சந்திக்க சென்றுள்ளார். பெண்ணை சந்திக்க சென்ற இடத்தில் அந்த இளைஞரும் அவருடைய நண்பரும் ஆறு பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டுள்ளனர். அந்த கும்பல் அந்த இளைஞரின் காரிலேயே வேறிடத்திற்கு கடத்தி சென்றுள்ளனர்.
Gennevillier கொண்டு சென்றதும் அவரை மீண்டும் தாக்கி அவருடைய ஆடைகளை அவிழ்த்த பின் சேன் ஆற்றில் வீசியுள்ளனர். ஆற்றில் மூழ்கிய அந்த இளைஞர் ஒருவழியாக சமாளித்து கரையேறி Colombes (Hauts-de-Seine) என்னும் இடத்தில் உள்ள ஒரு மருந்தகத்தை அடைந்து அவர்களிடம் தான் தாக்கப்பட்டதை தெரிவித்துள்ளார்.
அவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தனக்கு நடந்து கொடுமைகளை பற்றி காவல்துறையினரிடம் அவர் புகாரளித்தார். அவருடன் வந்த நண்பர் வேறொரு மருத்துவமனையில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.