505 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான ஜெல்லி மீன் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கனடாவின் ஒன்டாரியோ ராயல் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.
கனடாவில் உள்ள பர்கெஸ் ஷேல் புதைபடிவ தளத்திலுள்ள ஒரு பாறைக்குள் 182 புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் நீந்தும் ஜெல்லி மீனின் (Burgessomedusa phasmiformis) அரிய புதைப்படிவமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜெல்லி மீன்கள் 95 சதவிகிதம் நீரால் ஆனவையாகவும் விரைவாக சிதைவுக்கு ஆளாகக்கூடியவையாகவும் இருப்பதால் இந்தக் கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது.
1980கள், 1990களில் துவக்கத்தில் பல புதைபடிவங்கள் பர்கெஸ் ஷேலில் சேகரிக்கப்பட்டன.
பல்வேறு கடல்வாழ் உயிரினங்களின் புதைபடிவங்களைப் பராமரித்து வரும் டொராண்டோவில் உள்ள ராயல் ஒன்டாரியோ அருங்காட்சியகத்தில் கூட இல்லாத ஜெல்லி மீன்களைக் கண்டு விஞ்ஞானிகள் வியப்படைந்தனர்.
“நீங்கள் தண்ணீருக்கு வெளியே ஒரு ஜெல்லிமீனைப் பார்த்தால், இரண்டு மணிநேரம் கழித்து அது வெறும் பந்து போல ஆகிவிடும்” என்று அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சியாளர் ஜீன்-பெர்னார்ட் கரோன் கூறுகிறார். ராயல் சொசைட்டி இதழில் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் இந்த பழமையான ஜெல்லி மீன்கள் பற்றிய விவரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதைபடிவங்கள் உண்மையில் ஜெல்லிமீன்களின் புதைபடிவங்கள்தான் என்பதை, டொராண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜோ மொய்சியுக் மற்றும் அவரது குழுவினர் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர். அவர்கள் அதற்கு Burgessomedusa phasmiformis என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த ஜெல்லிமீன்கள் சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கடியில் மண் ஓட்டத்தில் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
முந்தைய அகழ்வாராய்ச்சிகளில் 560 மில்லியன் ஆண்டுகள் பழமையான பாலிப்களின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்த கண்டுபிடிப்பு அக்காலத்திலிருந்த பெரிய நீந்தும் ஜெல்லி மீன் பற்றிய முதன் முதலான, ஒரு உறுதியான சான்றினை பதிவு செய்துள்ளது.