Montreuil-லில் காவல்துறையினர் சோதனையில் காரில் 65 கிலோ கஞ்சா பிசின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சனிக்கிழமை மாலை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரவு 9 மணியளவில் காவல் நிலைய அதிகாரிகள் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த இருவரை அணுகி அடையாள ஆவணம் கேட்டுள்ளனர். அப்போது அவர்களில் ஒருவர் ஒரு கார் சாவியை மறைக்க முயற்சித்துள்ளார்.
இதைக் கவனித்த காவல்துறையினர் கார் சாவியை பெற்று அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை திறந்து சோதித்துள்ளனர்.
கதவைத் திறந்தவுடன் கஞ்சா வாசம் வீசவே சந்தேகமடைந்த காவல்துறையினர் காரை சோதனையிட்டதில் இரண்டு பெட்டிகளில் 65 கிலோ கஞ்சா பிசின் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
இரண்டு பெட்டிகளையும் பறிமுதல் செய்த காவல் துறையினர் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.