ஒப்பரிய உலக நகரங்கள் : பாரீஸ்

by Editor
0 comment

பிரான்ஸ் நாட்டின் வடபகுதியில் செயின் நதிக் கரையோரமாக பாரீஸ் நகரம் அமைந்துள்ளது. இது இரண்டு தீவுகளையும் சில குன்றுகளையும் உள்ளடக்கியது. ஐரோப்பாக் கண்டத்தில் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது. இங்கு ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர்.பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரீஸ் “விளக்கு நகரம்’, “காதல் கனவு தேசம்’ என்றும் அழைக்கப்படுகிறது. 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்நகரம் இன்று முக்கிய கலை மற்றும் வணிக நகரமாக விளங்குகிறது.

இந்த நகரின் முக்கியச் சிறப்புகளை இனி காண்போம்.ஈஃபில் கோபுரம்: இக்கோபுரம் 300 மீட்டர் உயரத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. இந்தக் கோபுரம் உருவான காரணம் மிகவும் சுவையானது. 1889-ஆம் ஆண்டு பாரீஸ் நகரில் அகில உலகக் கண்காட்சியில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் இக்கோபுரம் கட்டப்பட்டது. தாற்காலிகமாக நிறுவப்பட்ட இக்கோபுரம் பொதுமக்களின் விருப்பப்படி இடிக்காமல் விடப்பட்டது.இன்று ஈஃபில் கோபுரம் பிரான்ஸ் நாட்டிற்கு மட்டுமல்ல, ஐரோப்பா கண்டத்திற்கே அடையாளச் சின்னமாக விளங்குகிறது.

இதனைக் கட்டியவர் புகழ்பெற்ற பொறியாளரான “கஸ்டௌ ஈஃபில்’ என்பவர். அவரது பெயரே இதற்கு வழங்கி வருகிறது.இக்கோபுரத்தைக் கட்டி முடிக்க 12 ஆயிரம் இரும்புத் துண்டுகளும் 70 லட்சம் ஆணிகளும் பயன்படுத்தப்பட்டன. 2 வருடங்களில் நிறைவுபெற்றதாம்.லூவர்: உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்று லூவர் அருங்காட்சியகம். பிரான்ஸ், இத்தாலி நாடுகளின் கட்டடக் கலை பாணியில் உருவாக்கப்பட்டது. இந்தக் காட்சியகம் கட்டடக் கலைக்கே ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இங்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கலைப்பொருள்கள் உள்ளன.உலகப் புகழ்பெற்ற ஓவிய மேதை லியோனார்டோ டாவின்சி படைத்த மோனலிசா ஓவியம் இந்தக் காட்சியகத்தில் உள்ளது.கண்ணாடியாலான பிரமிடு வடிவ நுழைவாயில் ஒன்று இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இது லூவர் காட்சியகத்திற்கு மேலும் பொலிவைத் தருகிறது.புனித இருதய தேவாலயம்: மான்ட் மார்டிர் என்ற உயரமான குன்றின் உச்சியில் ரோமானிய பாணியில் புனித இருதய தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. 272 அடி உயர கோபுரமும் மாடமும் கொண்ட இந்த தேவாலயம் சுற்றுலாப் பயணிகளை மிகவும் ஈர்க்கிறது.நாட்ரே டேம் தேவாலயம்: உலகப் புகழ்பெற்ற இந்த தேவாலயம் நகரின் மையப்பகுதியில் உள்ள தீவில் கட்டப்பட்டுள்ளது. மிகவும் புனிதமாகக் கருதப்படும் இந்த இடத்தில் ரோமானியர்கள் தங்கள் கடவுளான ஜுபிடருக்கு ஆலயம் அமைத்து வழிபடுகின்றனர்.

இதனைக் கட்டி முடிக்கப் பல ஆண்டுகள் ஆயிற்றாம். பிரான்ஸ் நாட்டில் முன்னோடியான தேவாலயம் இது. 130 அடி நீளமுள்ள தேவாலயத்துக்கு 69 அடி உயரத்தில் இரண்டு கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. பிரமிக்க வைக்கும் கண்ணாடிச் சாளரங்கள் இதற்கு அழகு சேர்க்கின்றன.பாம்பிடு மையம்: இது புராதனக் கலைப்பொருட்களுக்கான அருங்காட்சியகம். கலைகளுக்கு உறைவிடம் இந்த மையம். இது கண்ணாடி மற்றும் உலோகங்களால் உருவாக்கப்பட்டது. பிரான்ஸ் அதிபர் ஜார்ஜ் பாம்பிடு என்பவர் கட்டியதால் அப்பெயர் பெற்றது.20-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய பிகாசோ போன்ற கலைஞர்களின் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைப்படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகை தந்து கண்டு களிக்கின்றனர்.எலிஸிஸ் சாலை: பாரீஸில் உள்ள இச்சாலை உலகின் மிக அழகிய சாலை என்று வர்ணிக்கப்படுகிறது. கிரேக்க நாட்டுப் புராணங்களின்படி “எலிஸியா’ என்பது வீரர்கள் இளைப்பாறும் இடமாகும். 17-ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்தச் சாலையில்தான் பிரான்ஸ் நாட்டு அதிபர் மாளிகை அமைந்துள்ளது. இதன் பெயர் பெடிட் அரண்மனை.திரையரங்குகள், அழகு மிளிரும் அங்காடிகள், ஓய்வெடுக்கப் பசுமைப் பூங்காக்கள், உணவகங்கள், ஓங்கி உயர்ந்த பெரிய கட்டடங்கள் என அமைந்துள்ள இச்சாலை சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் என்றே கூறலாம். கேளிக்கை கொண்டாட்டங்களை நகர மக்கள் இங்குதான் நடத்துகின்றனர். 2-ஆம் உலகப்போர் வெற்றி விழா இந்த எலிஸிஸ் சாலையில்தான் கொண்டாடப்பட்டது.

வெற்றிநினைவு வளைவு: பாரீஸ் நகர மக்கள் மிகவும் போற்றிப் புகழ்வது மாவீரன் நெப்போலியனைத்தான்! தான் கண்ட வெற்றிகளின் நினைவாக 1806-ஆம் ஆண்டு உருவாக்கியதுதான் இந்த வளைவு. ஆனால், அது கட்டி முடிக்கப்படும்போது நெப்போலியன் உயிரோடு இல்லை.நெப்போலியன் அடைந்த வெற்றிகள், அதற்குத் துணை நின்ற தளபதிகளின் பெயர்கள் இந்த வளைவில் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் அமைக்கப்பட்டுள்ள 234 படிகளில் ஏறி உச்சியை அடைந்தால் பாரீஸ் நகரம், சின்னங்கள் மற்றும் தேவாலயங்களையும் காணலாம்.லக்சம்பர்க்: இந்தப் பூங்கா 2,24,500 சதுர மீட்டர் பரப்பில் 1612-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. பூங்காவின் நடுவில் ஒரு பெரிய குளம் வெட்டப்பட்டுள்ளது. குளத்தைச் சுற்றிலும் பாதைகளும், புல்வெளிகளும் அமைக்கப்பட்டுள்ளன. பல சிலைகள் அழகு சேர்க்கின்றன.

இரண்டு அற்புதமான நீர்ச்சுனைகள், இரண்டு நீர்த்தாரைகள் மேலும் எழில் கூட்டுகின்றன.சௌமாண்ட் பூங்கா: ஒரு குன்றின் மேல் இப்பூங்கா அமைந்துள்ளது. இங்குள்ள நீர் வீழ்ச்சியில் 32 அடி உயரத்திலிருந்து விழுந்து, வட்ட வடிவ ஏரியைச் சென்றடைகிறது. இயற்கை வரைந்த அழகு ஓவியம்போல் சமவெளிகளும் மரம், செடி, கொடிகளும் சேர்ந்து அற்புதமாகக் காட்சியளிக்கின்றன.கல்லறைகள்: ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான வரலாறு கொண்ட பாரீஸ் நகரில் புகழ்பெற்ற பல கல்லறைகள் உள்ளன.

அவைகளில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவருவது “லக்ûஸஸ்’ என்ற கல்லறையாகும். 109 ஏக்கர் பரப்பளவு கொண்ட கல்லறையில் புகழ்பெற்ற அறிஞர்கள், கலைஞர்கள், தலைவர்கள் பல்துறைச் சான்றோர் இங்கு மீளாத் துயிலில் ஆழ்ந்துள்ளனர். அங்கு பல கற்சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன.புகழ்பெற்ற புராதனக் கட்டடங்கள், தேவாலயங்கள், அருங்காட்சியகங்கள் வண்ணமலர் குலுங்கும் பூங்காக்கள் எனத் தன்னுள் பல அரிய சிறப்புகளைக் கொண்ட பாரீஸ் நகரைக் கண்டு களிக்க ஆண்டுதோறும் 3 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணிகள் இங்கு சுற்றுலா வருகின்றனர்.

தகவல்: DINAMANI.COM

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech