22 வயதான ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஆசிரியை கஞ்சா போதைப்பொருளினை பயன்படுத்தியதற்காகவும் விற்றதற்காகவும் Conflans-Sainte-Honorine-யில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று Conflans-Sainte-Honorine பகுதியில் தாறுமாறாக சென்ற காரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்திய காவல்துறையின் குற்றத்தடுப்பு படையினர், காரை ஓட்டி வந்த இளம்பெண்ணிடம் ஓட்டுநர் உரிமமும், எவ்வித ஆவணங்களும் இல்லாததை கண்டுபிடித்துள்ளனர்.
அதோடு அந்த இளம்பெண்ணின் ஓட்டுநர் உரிமம் ஏற்கனவே இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதையும் கண்டறிந்தனர். அப்போது காருக்குளிருந்து கஞ்சா வாசனை வருவதை உணர்ந்த காவல்துறையினர் காருக்குள் சோதனை நடத்தியுள்ளனர். காருக்குள் நிறைய பொட்டலங்களில் கஞ்சா பிசினும், கஞ்சா இழைகளும் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
அவரை உடனடியாக கைது செய்த காவல்துறையினர் அவரை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். காரையும், அவருடைய வீட்டையும் முழுவதுமாக சோதனை செய்ததில் 1,065 யூரோ பணமும், 480 கிராம் கஞ்சா பிசினும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அந்த பெண் கடந்த வாரமும் இதே காரணத்திற்காக கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டவர் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை என்று கூறிய அந்த இளம்பெண் இறுதியாக தான் நான்கு முறை Ile-de-France-சில் போதைப்பொருள் விநியோகம் செய்ததாகவும், இதை கடந்த ஜூலை 2022 முதல் செய்து வருவதாகவும் ஒத்துக்கொண்டார். அவரது கைப்பேசி மற்றும் GPS பயன்பாடுகள் இதை உறுதி செய்தன.
அவருக்கு பத்து மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.