மக்கள் ஓய்வு பெறுவதற்கான பணிக்காலத்தை அதிகப்படுத்தியுள்ள பிரான்சு அரசின் புதிய ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக நாடு தழுவிய வேலை நிறுத்தம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரான்சில் பெரும்பாலான இரயில்கள் நிறுத்தப்படும், விமானம் மற்றும் மெட்ரோ சேவை பாக்கப்படும்.
ஜனவரி மாதம் 19-ஆம் தேதி பிரான்ஸ் முழுவதிலும் தொழிலாளர்கள் பெருமளவில் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும், வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
அதிவேக வெளியூர் ரயில்களில் மூன்றில் ஒன்று மட்டுமே இயங்கும் எனவும், உள்ளூர் இரயில்களில் பத்தில் ஒன்று மட்டுமே இயங்கும் என்றும் பிரான்சில் ரயில் சேவையை வழங்கும் நிறுவனமான SNCF தெரிவித்துள்ளது. பாரிசில் மூன்று மெட்ரோ பாதைகள் முற்றிலுமாக மூடப்படும், மற்ற தடங்களில் சிக்கல்கள் ஏற்படலாம் என மெட்ரோ நிறுவனமான RATP தெரிவித்துள்ளது.
விமான நிலையங்களை பொருத்தமட்டில், ஒர்லி (Orly) விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களில் ஐந்தில் ஒன்று இயங்காது.
தொடக்கப்பள்ளிகளில் பத்து ஆசிரியர்களில் எழுவர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று முன்னணி தொழிற்சங்கமான SNUipp-FSU தெரிவித்துள்ளது. அதேபோல், மற்ற துறைகளான சுத்தகரிப்பு நிலையங்கள் முதல் வங்கிகள் வரை வேலை நிறுத்தத்தில் பங்கேற்பாளர்கள் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில், ஓய்வூதியத்தை சீர்திருத்தி மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்கும்போதெல்லாம் அவற்றைத் தடுக்க முயற்சிக்கும் நீண்ட நெடிய போராட்ட வரலாற்றை பிரான்ஸ் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று மே 1968-இல் துவங்கிய சமூக ஆர்ப்பாட்டங்களில் இலட்சக்கணக்கானவர்கள் வீதியில் இறங்கி போராடினர். இது 1995 வரை நீடித்தது. போராட்டத்திற்கு நடுவிலும் திர்ப்புகளை மீறி வேறு பல ஓய்வூதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
சட்டப்பூர்வ ஓய்வு பெறும் வயது படிப்படியாக 62 லிருந்து 64 ஆக உயரும், அதே நேரத்தில் முழு ஓய்வூதியத்திற்கு தேவையான பணிக்காலம் முன்பு திட்டமிடப்பட்டதை விட வேகமாக உயரும். 2027-ஆம் ஆண்டு முதல் 43 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்படும் என்று அரசாங்கத்தின் திட்டங்கள் தெரிவிக்கின்றன.