பிரான்சின் Quimper நகரத்தில் (Finistère) உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் தனது நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்சாதனப் பொருட்கள் அடங்கிய அஞ்சல் பொதிகளின் நடுவே ஒரு கிலோ சுத்தமான கொகைன் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளார்.
அமெரிக்க வழங்குனர் ஒருவர் மெக்சிகோவில் தயாரிக்கப்பட்ட சில உதிரிபாகங்களை அனுப்பிய பெட்டியினுள் இப்போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், வெள்ளை நிற தூள் போன்ற பொருளை சுற்றியிருந்த நெகிழியை வெட்டியபோது தான் அது என்னவென்று நிறுவன முதலாளியும், அவருடைய ஊழியரும் கண்டுகொண்டதாகவும் கூறப்படுகிறது.
பொதியை இழந்தவர்கள் அதை மீட்க முயற்சிப்பதைத் தடுக்க உடனடியாக அந்நிறுவன மேலாளர் காவல்துறையை நாடியுள்ளார். அப்பொதியிலிருந்த கொகைன் போதைப்பொருள் மெக்சிகோவிலிருந்து வந்து பனாமா கால்வாய் வழியாக அட்லாண்டிக்கைக் கடந்து Le Havre-ஐ (Seine-Maritime) அடைந்து, Quimper-க்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மின்சாதனப் பொருட்கள் அடங்கிய 700-க்கும் மேற்பட்ட பெட்டிகளின் நடுவே அந்த மர்ம பெட்டி கண்டெடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட கொகைனின் மதிப்பு சுமார் 60 ஆயிரம் யூரோக்கள் முதல் 80 ஆயிரம் யூரோக்கள் வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது.