பாரிசின் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றான பாரிஸ் கார் தி நோரில் (Gare du Nord) அடையாளம் தெரியாத நபரொருவர் அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். காலை ஆறரை மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் கவலைக்கிடமான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தங்கள் பணி நேரம் முடிந்து சாதாரண உடையில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த சில போலீஸ் அதிகாரிகளால் தாக்குதல் நடத்திய நபர் கட்டுப்படுத்தப்பட்டார். இருப்பினும் அவர் எல்லை மீறவே,.அவர்களுடன் இருந்த எல்லை பாதுகாப்பு காவலர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார். உடனடியாக தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது செய்யப்பட்டபோது, தாக்குதல் நடத்தியவர் தனது பெயர் முகமது எம், ஏப்ரல் 1991 இல் பிறந்தவர் என்றும் அல்ஜீரிய குடியுரிமை பெற்றவர் என்றும் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கான அவரது உள்நோக்கங்கள் குறித்து எங்களுக்கு இன்னும் எதுவும் தெரியாது என்று உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அறிந்ததும் பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனின் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். ‘இந்த தாக்குதல் காலை 6:42 மணியளவில் இரயில் நிலையத்தின் வாயிலின் அருகே நடைபெற்றுள்ளது. இதில் ஒரு காவலர் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். ஒரு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காவலர்கள் மட்டும் தடுத்திருக்காவிட்டால் இன்னும் பலரை அவர் கொன்றிருப்பார். தாக்குதல் நடத்தியவர் வைத்திருந்த ஆயுதம் கத்தியல்ல ஆனால் அவரே தயாரித்த ஆபத்தான ஆயுதம். காவலர்களால் தாக்குதலாளி மூன்று முறை சுடப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. சுடப்பட்டதில் அவனது வலது தோளில் ஒரு தோட்டாவும், நெஞ்சில் இரண்டு தோட்டாக்களும் பாய்ந்துள்ளன. அவன் கண்விழித்ததும் விசாரணையை மேற்கொள்வோம்’ என்று ஊடகங்களிடம் அவர் தெரிவித்தார்.
‘தாக்குதல் நடத்தியவரின் உண்மையான அடையாளம் சரிவர தெரியவில்லை. அவர் யாரென்பதை அடையாளம் காணும் முயற்சி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அவர் லிபியாவையோ அல்ஜீரியாவையோ பிறப்பிடமாகக் கொண்டவராக இருக்கலாம். வயது இன்னும் கண்டறியப்படவில்லை’ என்று பாரிசின் அரசு வழக்குரைஞர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு சுமார் 700,000 பயணிகள் வந்து செல்லும் பாரிஸ் கார் து நோர்ட் ஐரோப்பாவின் பரபரப்பான சர்வதேச ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.