ஓய்வூதிய சீர்திருத்தம்: குறைந்தபட்ச ஓய்வூதியம் 1,200 யூரோக்களாக உயர்த்தப்பட்டது
கடந்த செவ்வாயன்று, பிரான்சு அரசு வருங்கால ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 1,200 யூரோக்களாக உயர்த்த வகை செய்யும் ஓய்வூதிய சீர்திருத்த திட்டத்தை அறிவித்துள்ளது. தற்போதைய ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த புதிய ஓய்வூதியம் சீர்திருத்தம் பொருந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல மாதங்களாக நடைபெற்ற ஆலோசனைக்குப் பின்னர், அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஓய்வூதிய சீர்திருத்த திட்டத்தை பற்றி கடந்த ஜனவரி 10, செவ்வாயன்று பாரிசில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் எலிசபெத் போர்ன் அறிவித்துள்ளார்.
அவரது உரையின் மைய கருத்துகள்:
- சட்டப்பூர்வ ஓய்வு பெறும் வயது 2030 ஆண்டு முதல் 64 ஆக உயர்த்தப்படும்.இது படிப்படியாக செப்டம்பர் 1, 2023 முதல் ஆண்டுக்கு 3 மாதங்கள் என்ற விகிதத்தில் உயர்த்தப்படும்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிபர் வேட்பாளர் மக்ரோன் வாக்குறுதியளித்தபடி, வருங்கால ஓய்வூதியதாரர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு 100 யூரோக்கள் உயர்த்தப்படும்.2023 செப்டம்பர் 1 முதல் தனது பணிக்காலத்தில் SMIC பெறும் ஒரு ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு SMIC-கில் 85% அல்லது மாதம் 1,200 யூரோக்களுக்கும் குறையாத ஓய்வூதியத்தைப் பெறுவார்.
ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களும் இந்த மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்சு அரசாங்கம் சிறிய ஓய்வூதியங்களை குறைந்தபட்ச மாத ஊதியத்தின் (SMIC) அளவிற்கு உயர்த்த விரும்புகிறது. வரவிருக்கும் நாட்களில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசிக்கப்பட்ட பின், ஜனவரி 23 அன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் மசோதாவில் இது சேர்க்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம்.