டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம், பிரான்சின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 சிவில் விமானங்களை வாங்க உள்ளது. இது இந்தியா – பிரான்ஸ் இடையேயான ஒத்துழைப்பின் ஆழத்தை வெளிப்படுத்துவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டாடா குழுமத்தின் ஏர் இந்தியா, பிரான்சின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்குவதற்கான அறிவிப்பு வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன், பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய சந்திரசேகரன், ஏர்பஸ் விமான நிறுவனத்தின் தயாரிப்பான அகலம் அதிகமாக இருக்கக்கூடிய A350 ரக விமானங்கள் 40 வாங்க உள்ளதாகவும், அகலம் குறைவான 210 விமானங்கள் வாங்க உள்ளதாகவும் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஏர்பஸ் விமான நிறுவனத்துடன் டாடா நிறுவனம் நல்லுறவை கொண்டிருப்பதாகத் தெரிவித்த சந்திரசேகரன், 250 விமானங்கள் வாங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா – பிரான்ஸ் இடையே உள்ள ஒத்துழைப்பின் ஆழத்தையும், சிவில் விமான போக்குவரத்தில் இந்தியா பெற்றிருக்கும் வெற்றியையும் இது வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு, சுகாதார பாதுகாப்பு ஆகியவற்றில் இந்தியாவும், பிரான்சும் முக்கிய பங்களிப்பை அளித்து வருவதாகத் தெரிவித்த நரேந்திர மோடி, சிவில் விமான போக்குவரத்துத் துறையில் ஏற்படும் வளர்ச்சி இந்தியாவின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களை இணைப்பதற்கும் வழி வகுக்கும் என குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரன், இந்தியாவுடன் புதிய தளங்களில் ஒத்துழைப்பை அதிகரிக்க பிரான்சின் விமான நிறுவனங்கள் காட்டும் ஆர்வத்தையே, ஏர்இந்தியா – ஏர்பஸ் ஒப்பந்தம் வெளிப்படுத்துவதாகக் கூறினார். இந்தியர்கள் அதிக அளவில் பிரான்சுக்கு வருகை தர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.