பிரான்சில் நடைபெற்ற கலவரத்தின் போது ஆசிரியையை ஆயுதப்படையினர் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஜூன் 30 பிரான்சில் நகேல் எனும் இளைஞர் கொல்லப்பட்டதையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. கலவரத்தை தடுக்க சிறப்பு ஆயுதப்படையினர் வரவழைக்கப்பட்டனர்.
கலவரத்தின் போது இரு காவல்துறையினர் ஆசிரியை ஒருவரை வில்தானுஸ் (Villetaneuse) பகுதியில் வைத்து கடுமையாக தாக்கியதாக அவர் காவல்துறையில் புகாரளித்துள்ளார்.
மாலை பள்ளி முடிந்து சைக்கிளில் நண்பர்களுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த அவர், வழியில் நகரமன்றம் அருகே எரிந்துக்கொண்டிருந்த வாகனத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த இரண்டு காவல்துறையினர் அவரை அங்கிருந்து போகும்படி விரட்டியுள்ளனர். மேலும், 51 வயதான அவரை கீழே தள்ளி கைகளில் விலங்கு மாட்டியுள்ளனர். காவலர் மேலே ஏறி அவரை அழுத்தி தள்ளி விலங்கு மாட்டியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு முழங்கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
‘காவல்துறையினரின் தாக்குதலால் அவருக்கு காயம் ஏற்பட்டது’ என ஆசிரியையின் வழக்குரைஞர் தெரிவித்துள்ளார். மற்ற காவலர்கள் தலையிட்டதாலேயே அந்த காவலர்களின் தாக்குதல் முடிவுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காவலர்களை அந்த ஆசிரியை திட்டியதால் அவரை கைது செய்ததாகவும், கைது செய்யும்போது அவர் சைக்கிளிலிருந்து கீழே விழுந்ததால் தான் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து சிறப்பு காவல்படையினர் ‘அதிகார பலத்தை பயன்படுத்தி உள்நோக்கத்தோடு தாக்குதல் நடத்தப்பட்டதா’ எனும் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.