மனைவியைக் கொன்றதாக 37 வயதான அவருடைய கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் போண்டியிலுள்ள Rue Roger-Salengro-வில் கடந்த சனிக்கிழமை காலை ஆறு மணியளவில் நடைபெற்றுள்ளது.
சம்பவத்தன்று வீட்டிலிருந்து பெண்ணொருவரின் கூக்குரலை தொடர்ந்து அவசர சேவையினர் வரவழைக்கப்பட்டனர். அவ்வீட்டிலிருந்த ஐந்து குழந்தைகளில் இருவர் அக்கப்பக்கத்தினரிடம் அடைக்கலம் புகுந்தனர். அவசர சேவை ஊழியர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பெண்ணொருவர் மயக்கமாகி கிடந்துள்ளார். அவரை உடனே பாரிசிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவ்வீட்டிலிருந்து இரத்தக்கறை படிந்த கத்தி கைப்பற்றப்பட்டது. சந்தேக நபருக்கு முகத்திலும் கையிலும் சிராய்ப்பு காயங்கள் இருந்துள்ளன. முன்னதாக அப்பெண் ‘என்னை என் கணவர் கொல்ல பார்க்கிறார்’ என்று கத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது வீட்டிலிருந்தவர்களை அந்நபர் பணயக்கைதியாக பிடித்து வைத்து மிரட்டியிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
ஒரு வயது முதல் பதினொரு வயதுடைய அவர்களுடைய ஐந்து பிள்ளைகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. அவர்களுக்கு தற்காலிக புகலிடமும், குழந்தைகள் மற்றும் மனநல பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.