பழம்பெரும் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 78.
தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார் வாணி ஜெயராம். 1975-ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் அவர் பாடிய பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகியாக தேசிய விருது பெற்றவர் வாணி ஜெயராம்.
1945-ம் ஆண்டு தமிழகத்தின் வேலூரில் பிறந்தவர் வாணி ஜெயராம். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் கலைவாணி. கேள்வியின் நாயகனே, ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் என்பவை உள்ளிட்ட பல பாடல்கள் மூலம் புகழ்பெற்றவர் வாணி ஜெயராம். தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், அசாமி, பெங்காலி, ஒடியா, குஜராத்தி உள்பட 19 மொழிகளில் வாணி ஜெயராம் பாடியிருக்கிறார். மேகமே மேகமே மற்றும் இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ, மல்லிகை என் மன்னன் மயங்கும் போன்ற பாடல்களை வாணி ஜெயராம் பாடியிருக்கிறார்.
இன்று தனது வீட்டில் கால் வழுக்கி விழுந்த வாணிஜெயராம், தலையில் அடிபட்டு உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. அவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.