இயக்குநர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த திரைப்படம் ‘துணிவு’. இதை போனி கபூர் தயாரித்திருந்தார். இப்படம் கடந்த 11 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தேசிய தொலைக்காட்சியான France 2, விவாத நிகழ்ச்சியின் போது அஜித்தின் துணிவு படம் குறித்து வியந்து பேசியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித்குமாரைப் பற்றி சிறிய அறிமுகம் அளிக்கப்பட்டுள்ளதோடு, அஜித்குமார் தென்னிந்தியாவின் பெரிய நடிகர் எனவும், பிரான்சின் முக்கிய நகரங்களில் நடிகர் அஜித்குமாருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதாகவும், பிரெஞ்சு படங்களை விட துணிவு படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், பாரிசில் இவ்வளவு நாட்கள் ஒரு திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுவது மிகப்பெரிய விஷயம் எனவும் அந்த நிகழ்ச்சியில் கூறப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் ‘ஜார்ஜ் குளூனி’ என்றும் அஜித்தை அதில் குறிப்பிட்டுள்ளார்கள். அந்த தொலைக்காட்சியின் காணொலியை அவரது இரசிகர்கள் உற்சாகமாக பகிர்ந்து வருகிறார்கள். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
அதே போல் பிரான்சின் முதன்மை ஊடகங்களில் ஒன்றான பிரான்ஸ் 24-உம் துணிவு திரைப்படத்தை கண்டவர்களை பேட்டிக்கண்டு அவர்களின் கொண்டாட்டத்தை வெளியிட்டுள்ளது.
பிரான்சில் மட்டும் 37 திரையரங்குகளில் துணிவு திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.