பிரான்சில் ஐந்தாவது நாளாக தொடரும் வன்முறை சம்பவங்களின் தொடர்ச்சியாக சான்-தெனியிலுள்ள இரண்டு அரசு அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
சான் தெனியிலுள்ள அரசு அலுவலகங்களில் ஒன்றான மக்கள் சேவை பிரிவு (services d’état civil) இயங்கும் தளத்திற்கு அதிகாலை 12:30 மணியளவில் வன்முறையாளர்கள் தீ வைத்துள்ளனர். இதில் தளம் முழுமைக்கும் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது.
‘தீப்பற்றிய தகவல் அறிந்ததும் அலுவலகத்துக்கு விரைந்த அரசு அதிகாரிகள் தீயணைப்பான்களை பயன்படுத்தி தீயின் பாதிப்பை குறைத்தனர். ஆனால் அவர்களால் அணைக்க முடியவில்லை. விரைந்து வந்து, அடுத்தடுத்த தளங்களிற்கு தீ பரவாமல் சில நிமிடங்களிலேயே தடுத்த தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுகள்’ என்று நகரத்தலைவர் தெரிவித்துள்ளார்.
‘ஏற்கனவே பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் முக்கியமான ஆவணங்கள் தீயில் சேதமடையாமல் பாதுகாப்பாக உள்ளன. எந்த பாஸ்போர்டும் சேதமடையவில்லை’ என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே நகர மருத்துவ மையம் (CMS) தாக்கப்பட்டதும், ஜன்னல்கள் உடைக்கப்பட்டு மருத்துவ அட்டைகள் திருடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.