வன்முறையில் ஈடுபடும் இளையர்களின் பெற்றோர் மீதும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பிரான்சின் சட்டத்துறை அமைச்சர் எரிக் துய்போன் மொரெட்டி தெரிவித்துள்ளார்.
பதற்றமான பகுதிகளில் வன்முறைகளில் ஈடுபடுபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பதினெட்டு வயது நிரம்பாக இளயவர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், ‘பெற்றோர் தங்கள் பிள்ளைகள் வன்முறையில் ஈடுபடாமல் பாதுகாக்க வேண்டும்’ என்று காவல்துறையினருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
‘பிள்ளைகள் மீது அக்கறையில்லாத பெற்றோர்கள், இரவில் வீட்டை விட்டு வெளியேறும் அவர்களின் பிள்ளைகள் இரண்டாண்டு சிறை மற்றும் முப்பதாயிரம் ஈரோக்கள் அபராதமும் விதிக்கப்படுவார்கள் எனும் சிக்கலை புரிந்துக்கொள்ள வேண்டும்’ என்று சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
‘ஒரு நாட்டின் பொறுப்பு பிள்ளைகளை வளர்த்தெடுப்பது அல்ல. அது பெற்றோரின் கடமை. நாட்டாலும் அரசாலும் பெற்றோர்களுக்கு உதவ முடியும் ஆனால் அவர்களுக்கு பதிலாக பதிலீடு செய்ய முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜராகாத பிள்ளைகளின் பெற்றோர்களை நேரில் ஆஜராகவோ அல்லது நேரடியாக அபராதம் விதிக்கவோ அல்லது பெற்றோரின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரவோ காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும்,
‘சமூக ஊடகங்கள் மூலமாகவே வன்முறை சம்பவங்கள் வலுக்கிறது. வன்முறையைத் தூண்டும் காணொளிகளை பதிவிடுவோரின் ஐபி முகவரிகளை அலைபேசி நிறுவனங்களிடம் சட்டப்பூர்வமாக பெற உள்ளோம்’ என்றும் கூறியுள்ளார்.