பிரான்சில் வாகன சோதனையின் போது காவலரால் சுட்டுக்கொல்லப்பட்ட நயேலின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. நாடெங்கும் கலவரம் ஏற்பட்டுள்ள சூழலில் நூற்றுக்கணக்கானோர் அமைதியான முறையில் நல்லடக்கத்தில் பங்கேற்றுள்ளனர்.
கடந்த சனிக்கிழமையன்று நயேல் மெர்சுக் என்ற பதின் வயது இளைஞர் காவலரால் வாகன சோதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்டது நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாக பிரான்சின் பல முக்கிய நகரங்களில் வன்முறை வெடித்துள்ளது. பல்வேறு வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கொல்லப்பட்ட நயேலின் உடல் நாந்தேரிலுள்ள இப்ன் பதிஸ் எனும் மசூதிக்கு இறுதிச்சடங்குகளுக்காக பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. மசூதி மற்றும் கல்லறையை சுற்றிலும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மசூதிக்குள் உறவினர்கள் தவிர யாரும் அனுமதிக்கப்படவில்லை. இறுதி சடங்குகள் முடிவுற்றதும் நயேலின் உடல் மோன் வலேரியன் கல்லறைத்தோட்டத்துக்கு நூற்றுக்கணக்கானோர் அமைதியாக பின் தொடர ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
நல்லடக்கத்திற்கு ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அங்கு இஸ்லாமிய வழக்கப்படி நயேலின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் கிட்டத்தட்ட 1800 பேர் பங்கெற்றனர் என்று கூறப்படுகிறது.
‘நயேல் ஒரு குழந்தை, நயேல் ஒரு தேவதை. அதனால் தான் நான் வெள்ளை உடை அணிந்து வந்தேன். இன்று நான் கோபமாகவும் அதே சமயம் வருத்தமாகவும் இருக்கிறேன். அவன் தன் பாட்டியுடன் நீண்ட நேரம் செலவிடுவான். அவனை இழந்தது வருத்தமளிக்கிறது’ என நயேலின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் பெண்மணி தெரிவித்தார்.