பிரான்சில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் கலவரம் தொடர்பாக இதுவரை 677 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 249 காவலர்கள் காயமடைந்துள்ளனர்.
பிரான்சின் பல்வேறு நகரங்களில் ஏற்பட்டுள்ள கலவரங்களை அடக்க கிட்டத்தட்ட நாற்பதாயிரம் காவலர்களும், ஷாந்தார்ம்களும் அனுப்பப்பட்டுள்ளனர்.
காவல்துறையினருடன் மோதுவதை விட கலவரக்காரர்கள் கடைகளை குறி வைத்து சூறையாடுவதாக கூறப்படுகிறது.
அமைதியை நிலைநாட்டுவதற்காக பாரிசில் பேருந்து மற்றும் டிராம் சேவைகள் இரவு ஒன்பது மணிக்கு மேல் நிறுத்தப்பட்டுள்ளன.
மர்செய் நகரில் நூலகம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது.
சேன் சாந்தெனியில் பல்வேறு அரசு அலுவலகங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
திரான்சியில் உள்ள ஒரு வணிக வளாகத்தை சரக்குந்தை வைத்து உடைத்து திறந்த கலவரக்காரர்கள், அதை சூறையாடிவிட்டு தீ வைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொல்லப்பட்ட நகெலின் மாவட்டமான பாப்லோ பிகாசாவில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவுகிறது.
தனது பெல்ஜியம் பயணத்தை இரத்து செய்துள்ள பிரெஞ்சு அதிபர் மக்ரோன் ‘வன்முறையை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது’ என்று கூறியுள்ளார்.