Thursday, February 19, 2026

பிரான்சில் மசூதிக்குள் தாக்குதல் – அதிபர் கண்டனம்!

by Special Correspondent
0 comments

பிரான்சில் உள்ள மசூதியில் வழிபட்டு கொண்டிருந்தவரை மர்ம நபர் ஒருவர் சரமாரியாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

பிரான்சின் லா கிராண்ட் கோம்ப் (La Grand-Combe) என்னும் ஊரில் உள்ள ஒரு மசூதியில், அதே ஊரைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க மாலி நாட்டை பூர்வீகமாக கொண்ட இளைஞர் ஒருவர் வழிபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகில் இருந்த மர்ம நபர் ஒருவர், யாரும் எதிர்பாராத சமயத்தில் அந்த இளைஞரை கத்தியால் சரமாரியாக பலமுறை தாக்கியுள்ளார். அதோடு, அவர் நிலைகுலைந்து விழுவதை தனது மொபைலில் பதிவு செய்த அவர், இழிவான கருத்துகளை பேசிக்கொண்டே அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இந்த காட்சிகள் அருகிலிருந்த கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகியுள்ளன. 

அடுத்த நாள் காலை மசூதிக்கு வந்தவர்கள், ரத்த வெள்ளத்தில் இளைஞர் ஒருவர் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகி காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இளைஞரின் கைப்பற்றி உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலைச் சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணையையும் துவக்கியுள்ளனர்.

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய அதிகாரிகள், ‘இஸ்லாமிய வெறுப்பினால் இந்த கொலை நிகழ்த்தப்பட்டதா?’ என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.  

‘தலைமறைவாக உள்ள குற்றவாளியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கூடிய விரைவில் அவரை கண்டுபிடித்து உரிய தண்டனை அளிக்கப்படும்’ என்று அப்பகுதியின் அரசு தரப்பு வழக்கறிஞர் (regional prosecutor), அபிடேல்க்ரிம் க்ரிணி (Abdelkrim Grini) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்துக்கு பிரெஞ்சு பிரதமர் பிரான்சுவா பெய்ரூ (François Bayrou) கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பான காணொளிகளை தனது வலைத்தளத்தில் பகிர்ந்து அவர், ‘தீவிர இஸ்லாமிய வெறுப்பை இச்சம்பவம் காட்டுவதாக’ கூறியுள்ளார்.

மேலும், பிரெஞ்சு அரசு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு துணையாக நிற்பதாகவும், குற்றவாளியை விரைவில் கண்டுபிடித்து அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.  

கொலை செய்யப்பட்ட இளைஞர் சில ஆண்டுகளுக்கு முன்பு மாலியிருந்து வந்தவர் என்றும், அந்தப் பகுதியில் அவர் பிரபலமாக அறியப்படும் நபர் என்றும் அந்த பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.  

மர்ம நபரால் மசூதியில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech