காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 22 தேதி,காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்தியா பாகிஸ்தானை பகிரங்கமாக குற்றம் சாட்டவில்லை எனினும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவியுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டி உள்ளது.
இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு புதன்கிழமை கூடியது. இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. முக்கியமாக சிந்து நதிநீர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டது.
‘சிந்து நதிநீர் ஒப்பந்தத்திற்கு எதிராக நதிநீரை திருப்பிவிடும் எந்த ஒரு செயலையும் பாகிஸ்தான் போர் நடவடிக்கையாகவே கருதும்’ என்று பாகிஸ்தானிய அரசு தெரிவித்துள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம்
கடந்த 1947 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டபோது இரு நாடுகளுக்கு இடையே நதி நீரை பகிர்ந்து கொள்ள எந்த ஒரு ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. நதிநீரை பகிர்வதில் நிறைய சிக்கல்கள் ஏற்பட்டதை தொடர்ந்து 1951 ஆம் ஆண்டு உலக வங்கியை நடுநிலையாக கொண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சு வார்த்தை நடத்தின. பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பின் 1960 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே சிந்து நதிநீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி கிழக்கு நோக்கி பாயும் ரவி, சட்லஜ், பியாஸ் ஆகிய மூன்று நதிகளின் நீரையும் இந்தியா பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நதிகள் இருந்து இந்தியா எவ்வளவு நீர் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அதேபோல் சிந்து, சேனாப், ஜீலம் ஆகிய மேற்கு நதிகளின் நீரை பாகிஸ்தான் முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தீர்மானமானது. சுமார் 80% நீர் பாகிஸ்தானுக்கும் மீதியுள்ள 20% இந்தியாவுக்கும் பகிரப்பட்டது.
பல ஆண்டுகளாக பன்னாட்டு நீர் பங்களிப்பு தொடர்பான சர்ச்சைகளில் இந்த ஒப்பந்தம் ஒரு மைல்கல்லாக அமைந்திருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தானை அச்சுறுவதற்கு பயன்படுத்தி வருகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டில் காஷ்மீரில் உள்ள ’உரி’ என்னும் இடத்தில் இந்திய ராணுவ படையினை பாகிஸ்தானிய தீவிரவாதிகள் தாக்கிய போதும் 2019 ஆம் ஆண்டு காஷ்மீரில் தற்கொலை குண்டு வெடிப்பால் இந்திய பாதுகாப்பு படையினர் உயிரிழந்த போதும் சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக இந்தியா அச்சுறுத்தியது.
பாகிஸ்தானின் நிலைமை?
பாகிஸ்தான் ஒரு வறண்ட நிலப்பகுதியாகும். ஏற்கனவே தீவிர வானிலை நிகழ்வுகளால் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறது. பாகிஸ்தானின் முக்கிய வேளாண் மண்டலங்களான பஞ்சாப் மற்றும் சிந்து பகுதிகள் 35% வரை தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்கும் என்று கடந்த மாதம் பாகிஸ்தானின் நீர் மேலாளர் எச்சரித்திருந்தார்.
இது குறித்து இஸ்லாமாபாத்தை சேர்ந்த நசீர் மேமன் என்னும் கொள்கை வகுப்பாளர் கூறுகையில், வருகின்ற பருவ மழை காலங்களில் கிழக்கு ஆறுகளில் இருந்து வெளியாகும் உபரி நீரை இந்தியா முன்னறிவிப்பின்றி திறந்து விட நேர்ந்தால் பாகிஸ்தானில் வெள்ளம் வர வாய்ப்பு உள்ளது.
வெள்ளம், பருவமழை வரும் காலம் போன்ற முக்கிய நீரியல் தகவல்களை இந்தியா தர மறுத்தால் பாகிஸ்தானில் உள்ள சிறு குறு விவசாயிகள் இதனால் அதிகம் பாதிப்படைவர் என்று அவர் கூறினார்.
இந்தியா பின் வாங்குமா
மோடியின் இந்த நடவடிக்கை உலக அரங்கில் இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனையை மேலும் அதிகரிக்கும் செயலாகவே கருதப்படும். எனினும் உள்நாட்டில் இது அவருக்கு சாதகமாகவே அமையும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
‘இது ஒரு அறிவார்ந்த நகர்வு’ என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக (Associate Professor) உள்ள ஹாப்பி முன் ஜேக்கப் கூறுகிறார் மேலும் இது ஆயுதமேந்திய சண்டையாக மாறாதவரை பன்னாட்டு அரங்கில் இந்தியாவுக்கு பாதகமான விளைவுகள் எதுவும் ஏற்படாது என்று கூறுகிறார்.
சிந்து நதி ஒப்பந்தத்தில், நதியின் கீழ்ப்பகுதியில் உள்ள மக்களை பாகிஸ்தான் சமரசம் செய்துவிட்டது. இதற்கு தீர்வு காண இந்தியாவின் இந்த எதிர்வினை ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. இந்த பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்து சென்று பாகிஸ்தானின் நிலையை தெளிவாக நிலைநாட்டி அதன் பங்கை பெறுவதற்கான ஒரு வாய்ப்பு என்று நீரியல் நிபுணரான ஹாசன் அப்பாஸ் கூறுகிறார்.